இயற்கை விவசாய பண்ணையாக பள்ளி வளாகத்தை மாற்றிய பெண்

கொரோனாவின் போது, வீட்டில் வேலையின்றி அமர்ந்திருந்த பலரும் மாடி தோட்டம் உட்பட பல பணிகளில் ஈடுபட்டனர். ஆனால், பெங்களூரை சேர்ந்த பள்ளி இயக்குநர் ஒருவர், பள்ளி வளாகத்தையே சிறிய பண்ணையாக மாற்றி, 40 கிலோ காய்கறிகள், பழங்கள் விளைவிக்கிறார்.
பெங்களூரு வர்த்துாரில் விஸ்வ வித்யாபீடம் பள்ளி அமைந்து உள்ளது. இங்கு, 1,400 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இதன் இயக்குநராக சுசீலா சந்தோஷ் உள்ளார். இவரே, பள்ளி வளாகத்தை பண்ணையாக மாற்ற காரணமானவர்.
இது குறித்து, அவர் கூறியதாவது:
கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்புகள் துவங்கியதால், பள்ளி வளாகம் மாணவர்கள் இன்றி வெறிச்சோடியது. அத்துடன் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள், சமையல் அறை ஊழியர்கள், உதவியாளர்கள் பணி இல்லாமல் சிரமத்துக்கு உள்ளாகினர்.
அப்போது தான், பள்ளி வளாகத்தில் பயன்படாமல் இருந்த இடம் கண்ணில் பட்டது. இந்த இடத்தை சிறிய இயற்கை பண்ணையாக மாற்றலாமே என்று யோசனை தோன்றியது. பின், ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்களை வரவழைத்து, மளமளவென பண்ணை அமைக்கும் பணியில் ஈடுபட்டேன்.
கொரோனா முடிந்த பின்னரும் இதை தொடர வேண்டும் என்று முடிவு செய்தோம். தற்போது எங்கள் பள்ளி சமையல் அறைக்கு தேவையான காய்கறிகளை, இங்கேயே விளைவித்து பயன்படுத்தி கொள்கிறோம். அதுபோன்று பப்பாளி, வாழைமரம், 40க்கும் அதிகமான மருத்துவ குணம் கொண்ட செடிகளை வளர்த்து வருகிறோம்.
இது, பள்ளி கட்டடங்கள் இடையே உள்ள பகுதி, சமையல் அறை மாடி, கட்டடத்தின் பின்புறம் உள்ள காலி என வளாகம் முழுதும் விரிவடைந்தது. அத்துடன், காய்ந்த இலைகள் சேகரித்து, உரமாகவும் பயன்படுத்துகிறோம். மழைநீர் மற்றும் சமையல் அறையில் வீணாகும் நீரையே, பண்ணைக்கு பயன்படுத்துகிறோம். அத்துடன், வளாகத்தில் உள்ள 200 வாழை மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச, தனி தண்ணீர் குழாய் பதிக்கப்பட்டு உள்ளது.
இந்த பண்ணையால் மாதம் 40 கிலோ வரை காய்கறிகள், பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. இதில் இருந்தே குழந்தைகள், ஆசிரியர்கள், ஊழியர்களுக்கான உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. மீதமாகும் உணவுகளை, எங்களின் ஊழியர்களின் வீடுகளுக்கு கொடுத்து விடுகிறோம்.
பள்ளி திறப்பதற்கு முன், இங்கு தயாராகும் உணவுகளை, ஊழியர்களின் வீடுகளுக்கு வழங்கி வந்தோம். இதையறிந்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமையில் இருக்கும் நோயாளிகளுக்கு வழங்கும்படி கோரிக்கை எழுந்தது. எனவே, அவர்களுக்கும் குறைந்த விலையில் உணவு தயாரித்து கொடுத்தோம்.
கொரோனாவுக்கு பின் பள்ளிக்கு வந்த மாணவ - மாணவியருக்கு, இந்த பண்ணையை சுற்றிக் காண்பித்தோம். தற்போது அனைத்து மாணவர்களும், பண்ணை பராமரிப்பில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
பாட புத்தகங்கள் மூலம் மட்டுமே அறிவை வழங்கும் இடமாக பள்ளிகள் இருக்கக்கூடாது. எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள, அவர்களை தயார்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் - .
மேலும்
-
அதிகாரத்தை பகிர தயக்கம் ; முதல்வர் சித்தராமையாவை மறைமுகமாக சாடிய டிகே சிவகுமார்
-
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு இந்தியா மறைமுக நிதியுதவி; அமெரிக்கா அபாண்டமான குற்றச்சாட்டு
-
மாநில காங்., செயலாளர் பிறந்த நாள் மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு
-
கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் கட்ட எதிர்ப்பு : பா.ம.க., ஆர்ப்பாட்டம்
-
பெரியாயி அம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கு வழிபாடு
-
வேலை வாய்ப்பு முகாம் : 641 பேருக்கு பணி ஆணை