தினக்கூலி டூ தொழில் முனைவோர்

வேலைக்கு செல்ல தயங்கி வீட்டிற்குள் இருந்த பெண்கள், தற்போது வீட்டில் இருந்தே சுயதொழில் செய்து தொழில் முனைவோராக மாறி வருகின்றனர். இவர்களில் ஒருவர் ஜெயசுதா.

பெங்களூருக்கு மிக அருகில் உள்ள கோலாரை சேர்ந்தவர். 'செர்ரி' என்ற பெயரில் ராகி, தானியங்கள், தானிய மாவு, இட்லி பொடி உள்ளிட்ட உணவு பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.

இதுகுறித்து ஜெயசுதா கூறியதாவது:

நான் அதிகம் படித்தது இல்லை. குடும்பத்தின் நிதி சுமையை போக்க தினக்கூலி வேலைக்கு சென்றேன். கர்நாடக அரசின் திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் மற்றும் வாழ்வாதார துறையின் கீழ் நடத்தப்படும் 'ஸ்வாலம்பனே' என்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.

அந்த நிகழ்ச்சியில் பெண்கள் தொழில் முனைவோராக மாறுவது எப்படி என்பது பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டது. இதனால் 'ஸ்வாலம்பனே' திட்டத்தின் கீழ் உணவு தானியங்கள் தயாரிப்பது பற்றி பயிற்சி எடுத்து கொண்டதுடன், அரசின் நிதி உதவியை பெற்று உணவு தானியங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி விற்பனை செய்ய ஆரம்பித்து, தற்போது தொழில் முனைவோராக மாறி உள்ளேன். ஆண்டுக்கு 2.50 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. என்னிடம் நான்கு பெண்கள் வேலை செய்கின்றனர்.

அரசின் சுயசார்பு திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் சலுகைகளை பயன்படுத்தி, பெண்கள் தொழில் முனைவோராக வர வேண்டும் என்பது எனது ஆசை. வரும் காலத்தில் எனது தொழிலை பெருக்கி, நிறைய பெண்களுக்கு வேலை அளிக்க வேண்டும் என்பது எனது ஆசை. வேலையில்லாத பெண்கள் அனைத்து விஷயத்திற்கும், குடும்பத்தினரை நம்பி இருக்க வேண்டி உள்ளது. சுயதொழில் செய்வதால் அவர்களுக்கு என்று வருமானம் வருவதுடன், இந்த சமூகத்திலும் உயர்ந்த நிலைக்கு செல்ல முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement