'குறைந்த பாடல்கள் எழுதினாலும் நிறைந்த புகழ் பெற்றவர் மாயவநாதன்'

சென்னை:''குறைந்த எண்ணிக்கையிலான பாடல்களே எழுதினாலும், நிறைந்த புகழைப் பெற்றவர் மாயவநாதன்,'' என, கவிஞர் முத்துலிங்கம் பேசினார்.
கவிஞர் நெல்லை ஜெயந்தா எழுதிய, 'மறக்க முடியாத மாயவநாதன்' என்ற நுால் வெளியீட்டு விழா நேற்று, சென்னை, சி.ஐ.டி.,நகரில் நடந்தது. நுாலை, நடிகர் சார்லி வெளியிட, கவிஞர் அன்பு கவிபாலா பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற கவிஞர் முத்துலிங்கம் பேசியதாவது:
நான், திரைப்பட பாடல்கள் எழுத, சென்னைக்கு வந்தபோது முதலில், ஆலங்குடி சோமுவைத்தான் சந்தித்தேன். அடுத்து சந்தித்தது கவிஞர் மாயவநாதன்.
மாயவநாதன், மயிலாப்பூரில் ஒரு விடுதியில் தங்கி இருந்தார். அவரை அடிக்கடி சந்தித்து பழகியதுண்டு.
அவர், நடிகை சந்திரகாந்தாவுக்காக, 'பொன்னியின் செல்வி' என்ற நாட்டிய நாடகத்தை எழுதினார். அதில், பாடல்களும் சிறப்பாக இருந்தன.
அந்த நாடகத்தையும், கு.மா.பாலசுப்பிரமணியன் எழுதிய நாடகத்தையும் பார்த்தேன். அதில் மிகவும் கவர்ந்த நாடகம் 'பொன்னியின் செல்வி' தான்.
அவர் திரைப்படங் களுக்காக எழுதிய, 'தண்ணிலவு தேனிரைக்க, நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ, பாவியென்னை மறுபடியும் பிறக்க வைக்காதே' உள்ளிட்ட பாடல்கள் மிகவும் புகழ் பெற்றவை.
அவர், சக்தி பக்தராகவும், சித்தர்களோடு பழகுபவராகவும் இருந்தார். பல தத்துவப்பாடல்களை எழுதி, பாடிக்காட்டுவார். அப்படி ஒருமுறை பாடிக்காட்டிவிட்டு கிழித்து விட்டார்.
அவர் தன், 35வது வயதில், ராயப்பேட்டையில், பஸ்சில் இருந்து இறங்கும்போது, தவறி விழுந்து இறந்துவிட்டார். அவர் மறைவு, என்னை மட்டுமல்ல, திரையுலகையே உலுக்கியது.
அரசு பணியை விட்டு, பாடல் எழுத வந்த அவர், குறுகிய காலமே, குறைந்த பாடல்களையே எழுதினார் என்றாலும், நிறைந்த புகழை பெற்றுவிட்டார்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும்
-
'சிறுமி முதல் மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பில்லை' அன்புமணி குற்றச்சாட்டு
-
ஆன்லைன் டிரேடிங் செயலி; ரூ.50 லட்சம் நஷ்டம் மேலாளர் தற்கொலை
-
அரியலுார் அருகே பாலம் பக்கவாட்டு சுவர் சரிந்து போக்குவரத்து பாதிப்பு
-
வக்கீல் வீட்டில் ரூ.50 லட்சம் 50 சவரன் திருட்டு
-
ராணுவ சரக்கு விமானம் ஒப்படைத்தது 'ஏர்பஸ்'
-
வெடிகுண்டை வைத்து விளையாடிய 5 குழந்தைகள் பலி