கிராமப்புற ஏரிகளில் நடக்கும் கனிமவள கொள்ளை உயிர்பலி அபாயத்தில் காஞ்சிபுரம் விவசாயிகள்

காஞ்சிபுரம்,:காஞ்சி மாவட்டத்தில் உள்ள கிராமப்புற ஏரிகளில், விதிகளை மீறி கனிம வள கொள்ளை நடப்பதால், மழைக்காலத்தில் உயிர்பலி ஏற்படுமோ என, விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் 381 ஏரிகள் உள்ளன.
இவற்றில் பலவற்றில், விவசாயிகளுக்கு வண்டல் மண் அள்ளவும், சாலை விரிவாக்க பணிக்கு சவுடு மண் அள்ளவும், மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கிறது.
15 அடி ஆழம் இதை பயன்படுத்தி, டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்கள் மண்ணை கொள்ளையடித்து வருகின்றனர்.
குறிப்பாக, காஞ்சிபுரம் தாலுகா, ஆண்டி சிறுவள்ளூர் கிராமம் மற்றும் வாலாஜாபாத் தாலுகா நத்தாநல்லுார் கிராம ஏரிகளில் இஷ்டம்போல் மண்ணை அள்ளி வருகின்றனர்.
பொதுவாக, எந்த ஏரியில் மண்ணை அள்ளினாலும், 4 அடி ஆழத்திற்கு மட்டுமே மண்ணை அள்ள வேண்டும்.
ஆனால், ஒப்பந்ததாரர்கள், பொக்லைன் இயந்திரம் மூலம், 15 அடி ஆழத்திற்கு மண் எடுத்து வருகின்றனர். அதை லாரிகளில் ஏற்றி, பல இடங்களுக்கு விற்று வருகின்றனர்.
இதை நீர்வளத் துறையினர் கண்டுகொள்ளாமல் இருப்பதாக, விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, தேசிய தென்னிந்திய இணைப்பு விவசாயிகள் சங்க காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் ஏ.எம்.கண்ணன் கூறிய தாவது:
மாவட்ட நிர்வாகம் ஏரியில் 4 அடிக்கு மண் அள்ள அனுமதி அளித்தால், டெண்டர் எடுத்தவர்கள், 15 அடி ஆழம் வரை தோண்டி மண் அள்ளுகின்றனர்.
தடுத்து நிறுத்த வேண்டும் கேட்டால், மேற்பகுதியில் இருக்கும் மண்ணை எடுத்து, ஏரியின் கரை பகுதியில் கொட்டிவிட்டு, 4 அடிக்கு கீழ் இருக்கும் சவுடு மண்ணை மட்டுமே அள்ளி வருகிறோம்.
தோண்டி எடுத்து கரையில் குவித்த மண்ணை, மீண்டும் ஏரிக்குள் தள்ளிவிடுவோம் என்கின்றனர். ஆனால், அவ்வாறு செய்வதில்லை.
ஏற்கனவே, தென்னேரி ஏரியில் அளவுக்கு அதிகமாக தோண்டிய பள்ளங்களில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கியது. பள்ளம் இருப்பது தெரியாமல், மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் அவற்றில் சிக்கி இறந்துள்ளன. இதே நிலை தான் நத்தாநல்லுார் ஏரியில் ஏற்படும்.
இது போன்று, கால் நடைகள் மட்டுமின்றி மனிதர்களும் தண்ணீர் தேங்கும் பள்ளங்களில் சிக்கி உயிரிழப்பை தடுக்கவும், அளவுக்கு அதிகமாக மண் அள்ளுவதை தடுத்து நிறுத்தவும் தான் அரசிடம் முறையிட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, நீர்வள ஆதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஏரிகளில், அளவுக்கு அதிகமாக மண் அள்ள வேண்டாம் என, ஒப்பந்தம் எடுத்தவருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மீறினால், ஒப்பந்தம் ரத்து செய்ய, மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்யப்படும். மண் அள்ள அனுமதிக்கப்பட்ட ஏரிகள் கண்காணிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
'சிறுமி முதல் மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பில்லை' அன்புமணி குற்றச்சாட்டு
-
ஆன்லைன் டிரேடிங் செயலி; ரூ.50 லட்சம் நஷ்டம் மேலாளர் தற்கொலை
-
அரியலுார் அருகே பாலம் பக்கவாட்டு சுவர் சரிந்து போக்குவரத்து பாதிப்பு
-
வக்கீல் வீட்டில் ரூ.50 லட்சம் 50 சவரன் திருட்டு
-
ராணுவ சரக்கு விமானம் ஒப்படைத்தது 'ஏர்பஸ்'
-
வெடிகுண்டை வைத்து விளையாடிய 5 குழந்தைகள் பலி