குடிநீர் திட்டத்தை தொடர்ந்து சீர்குலைக்கும் மர்மக்கும்பல் * பரிதவிக்கும் அரசு அதிகாரிகள்

வடமதுரை: வடமதுரை கோப்பம்பட்டி கிராமத்திற்கான குடிநீர் திட்டத்தில் தொடர்ந்து மர்மக்கும்பல் ஒயர்களை திருடி சென்றுவிடுவதால், என்ன தான் செய்வதென தெரியாமல் ஒன்றிய நிர்வாகிகள் திகைப்பில் உள்ளனர்.

மோர்பட்டி ஊராட்சி கோப்பம்பட்டியில் இருக்கும் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலைத் தொட்டிக்கு நீரேற்ற கொல்லப்பட்டி பிரிவு அருகில் நான்குவழிச்சாலை அருகில் இருக்கும் அரசு இடத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. இதற்கான மின்சப்ளை அருகிலிருந்த மற்றொரு மின்கம்பத்தில் இருந்து பெற்று தனியார் மோட்டார் ‛சுவிட்ச்' கட்டமைப்பு நிறுவி அங்கிருந்து கேபிள் மூலம் ஆழ்துளை கிணற்றுக்கு வழங்கி நீர் சப்ளை எடுக்கப்பட்டது. ‛சுவிட்ச்' கட்டமைப்பிற்கும் ஆழ்துளை கிணறுக்கும் இடையே 50 மீட்டர் துார மின்சார கேபிள் ஒரு அடி ஆழத்தில் மண்ணிற்கு பதிக்கப்பட்ட நிலையிலும் அதையும் தோண்டி சில மாதங்களில் 5 முறை மர்ம கும்பல் வெட்டி திருடி சென்றது. இச்சம்பவங்கள் தொடர்பாக ஒன்றிய நிர்வாகம் போலீசில் புகார் செய்தும் இதுவரை யாரும் பிடிக்கப்படவில்லை. அரசு இடத்தில் ஏற்படுத்தப்பட்ட குடிநீர் திட்டத்தை செயல்படுத்தவிடாமல் சீர்குலைக்கும் மர்ம நபர்கள் ஒருபுறம், மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டிய பொறுப்பு மறுபுறம் என வடமதுரை ஒன்றிய அதிகாரிகள் பரிதவிக்கின்றனர்.

Advertisement