ஆடிப்பெருக்கை முன்னிட்டு கோயில்கள் நீர்நிலைகளில் சிறப்பு வழிபாடு

தேனி: ஆடிப்பெருக்கை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள கோயில்கள், நீர்நிலைகளில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

வீரபாண்டி கண்ணீஸ்வர முடையார் கோயில் அருகே முல்லைப் பெரியாறு ஆற்றங்கரையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பெண்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். தொடர்ந்து ஆற்றங்கரையில் வழிபாடு செய்து திருமாங்கல்யம் மாற்றினர். குடும்பத்தினருடன் சென்று கவுமாரியம்மனை தரிசனம் செய்தனர்.

கோயிலில் கூட்டம் அதிகம் காணப்பட்டதால் சுமார் 35 நிமிடங்களுக்கு மேல், காத்திருந்து தரிசனம் செய்தனர். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. பக்தர்கள் சிலர் தரிசனத்திற்கு வந்தவர்களுக்கு பிரசாதம், கூழ் வழங்கினர்.

தேனி நகர் பகுதியில் பெத்தாட்சி விநாயகர் கோயில், மதுரை ரோடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், என்.ஆர்.டி., நகர் சிவகணேச கந்த பெருமாள் கோயில்களில் நடந்த சிறப்பு வழிபாடுகளில் பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

உத்தமபாளையம்: கா ளாத்தீஸ்வரர் உடனுறை ஞானம்பிகை கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. முல்லைப் பெரியாற்றில் பெண்கள் விளக்குகளை ஏற்றி தண்ணீரில் மிதக்கவிட்டு வழிபட்டனர்.

ஆடிப்பெருக்கை முன்னிட்டு இக்கோயிலில் அதிகாலை முதல் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. ஞானாம்பிகை, காளாத்தீஸ்வரர் சந்தனகாப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். திரளாக பக்தர்கள் அதிகாலை முதல் வந்த வண்ணம் இருந்தனர். சுவாமி தரிசனத்தை முடித்து பின்னர் எதிர்புறம் உள்ள முல்லைப் பெரியாற்றில் தீபம் விடும் நிகழ்ச்சி நடந்தது.

பெண்கள் தண்ணீரில் தீபங்களை ஏற்றி வணங்கினர். யோக நரசிங்க பெருமாள் கோயிலில் அதிகாலை முதல் பக்தர்கள் திரளாக வந்து பெருமாளையும் லட்சுமி தாயாரையும் வழிபட்டனர்.

கம்பம்: கம்பராயப் பெருமாள் கோயிலில் பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பக்தர்கள் திரளாக வந்து சுவாமி தரிசனம் செய்தனர். இங்குள்ள கவுமாரியம்மன், வேலப்பர் கோயில்களிலும் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. வேலப்பர் கோயிலில் சுவாமிக்கு விபூதி அலங்காரமும், கவுமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு மலர் அலங்காரமும் செய்யப்பட்டு இருந்தது. சின்னமனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோயில், சிவகாமியம்மன் கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

பெரியகுளம்: பாலசுப்பிரமணியர் கோயில் வராகநதிக்கரையில் ஆடி 18ம் பெருக்கை முன்னிட்டு சுமங்கலி பூஜை நடந்தது. ஏராளமான தம்பதிகள் ஒன்றுகூடி சுமங்கலிகள் திருமாங்கல்யம் கட்டி கொண்டனர். வராக நதிக்கு அர்ச்சகர் கார்த்திக், பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தன அபிஷேகம், தீபாராதனை செய்தார். ஏராளமான பெண்கள் கையில் விளக்குகளை ஏற்றி வராகநதியில் விட்டு, நதிவழிபாட்டில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை பா.ஜ., ஒன்றியத் தலைவர் கோபிக்கண்ணன், சிவனடியார்கள் குழுவினர்கள் ராமமூர்த்தி, பாலாஜி உட்பட ஆன்மிக பக்தர்கள் செய்திருந்தனர்.

பெரியகுளம் பகுதியில் கோயில்களில் விசேஷ பூஜைகள் நடந்தன. கவுமாரியம்மன், கம்பம் ரோடு காளியம்மன், அழகுநாச்சியம்மன், தாமரைக்குளம் சீலைக்காரி, பத்ரகாளியம்மன், தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில்,தண்டுப்பாளையம் காளியம்மன் கோயில் உட்பட அனைத்து அம்மன் கோயில்களிலும், குலதெய்வக் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

போடி: போடி காசி விஸ்வநாதர் கோயில் அருகே கொட்டகுடி ஆற்றுப் பகுதி யில் மாவினால் அம்மன் சிலை செய்து பெண்கள் வழிபட்டனர். திருமாங்கல்ய கயிறு மாற்றினர். அங்குள்ள சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

போடி அருகே பிச்சாங்கரை மலைப் பகுதியில் அமைந்துள்ள கயிலாய கீழச் சொக்கநாதர் கோயில், போடி பரமசிவன் கோயிலில் உள்ள சிவனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், தீபாராதனை நடந்தன. மலைமீது உள்ள வடமலைநாச்சியம்மன் கோயில், விசுவாசபுரம் பத்திர காளியம்மன் கோயில், போடி குலாலர் பாளையம் காளியம்மன் கோயில், தாய் ஸ்தலம் சவுடேஸ்வரி அம்மன் கோயில், புதுக்காலனி ஆதிபராசக்தி கோயில், சுப்பிரமணியர் கோயிலில் உள்ள துர்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன.

Advertisement