நாய்களை கொன்று புதைத்ததாக புகார்: ஊராட்சி மீது வழக்கு

மூணாறு: மூணாறு நகரில் சுற்றித்திரிந்த தெரு நாய்களை கொன்று புதைத்ததாக எழுந்த புகாரை அடுத்து ஊராட்சி நிர்வாகம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

சுற்றுலா நகரான மூணாறில் நுாற்றுக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றுலாப் பயணிகள், பொது மக்கள் ஆகியோருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சுற்றித் திரிந்தன. அவை கடித்து பலர் காயம் அடைந்த நிலையில், கடந்த மே 2025ல் நகரில் ஒரே நாளில் தெரு நாய்கள் கடித்து, பத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் காயமுற்றனர். அதேபோல் மூணாறு அருகே தேவிகுளத்தில் கடந்த ஜூனில் நாய் கடித்து ஐந்து மாணவிகள் பலத்த காயம் அடைந்தனர்.

மாநில முழுதும் தெரு நாய்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஊராட்சிகள் தோறும் ஏ.பி.சி., (அனிமல் பெர்த் கன்ட்ரோல்) மையங்கள் உள்ள போதும் இடுக்கி மாவட்டத்தில் மூணாறு உட்பட ஒரு ஊராட்சியிலும் ஏ.பி.சி., மையங்கள் இல்லை.

இந்நிலையில் மூணாறு நகரில் சுற்றித் திரிந்த தெரு நாய்களை காணவில்லை என்பதால், சமூக ஆர்வலர்கள் விசாரணையில் இறங்கினர். அதில் நாய்களை கொன்று கல்லார் எஸ்டேட் செல்லும் ரோட்டில் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான குப்பை சேமிப்பு கிடங்கில் புதைக்கப்பட்டதாக தெரிய வந்தது. அதுகுறித்து மேனகா காந்தி முதல் கேரள முதல்வர் பினராயி விஜயன் உட்பட அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோரிடம் சமூக ஆர்வலர்கள் புகார் அளித்தனர். அதன்படி மூணாறு போலீசார் ஊராட்சி நிர்வாகம் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

Advertisement