விதிமுறை மீறி ஆற்றில் தள்ளப்பட்ட மண்: அதிகாரிகள் செயலால் அதிருப்தி

மூணாறு: மூணாறில் விதிமுறைகளை மீறி அதிகாரிகள் ஆற்றில் மண் தள்ளிய சம்பவம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மூணாறில் கடந்த வாரம் பெய்த கன மழையில் பல பகுதிகளில் மண், நிலச்சரிவு ஏற்பட்டன. கொச்சி தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு போலீஸ் ஸ்டேஷன் அருகே நகருக்கு வரும் பாலம் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. அந்த மண்ணை அகற்றி வேறு பகுதிக்கு கொண்டு செல்லாமல் எதிரே ஓடும் குட்டியாறு ஆற்றில் தள்ளினர்.

தற்போது மாட்டுபட்டி அணை திறக்கப்பட்டு உள்ளதால், அந்த தண்ணீர் குட்டியாறு ஆறு வழியாக முதிரை புழை ஆற்றில் கலந்து பழைய மூணாறில் உள்ள 'ஹெட் ஒர்க்ஸ்' அணை வழியாக பாய்ந்து செல்கின்றது. மாட்டுபட்டி அணை திறக்கப்பட்டதால் குட்டியாறு ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதனால் ஆற்றில் தள்ளிய மண் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு ஹெட் ஒர்க்ஸ் அணையில் தங்கும் என்பதால் நீர் சேமிப்பு திறன் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. அதனால் ஆற்றில் விதிமுறைகள் மீறி அதிகாரிகள் மண் தள்ளிய சம்பவம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement