புளிய மரத்தில் கார் மோதி பெண் உட்பட 3 பேர் பலி

ஆர்.கே.பேட்டை : திருத்தணி அருகே புளிய மரத்தில் கார் மோதிய விபத்தில், பெண் உட்பட மூன்று பேர் பலியாகினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரைச் சேர்ந்தர்கள் கண்ணகி, 50, அவரது மகன் கார்த்தி, 25; உறவினர்கள் சம்பத்குமார், 47 மற்றும் ஸ்டாலின், 40.

இவர்கள் நான்கு பேரும் நேற்று காலை, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த நல்லாட்டூரில் நடந்த குடும்ப நண்பர் ஒருவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க, 'மாருதி ஸ்விப்ட்' காரில் வந்தனர்.

இறுதிச் சடங்கு முடிந்த பின், மாலை 4:00 மணியளவில் ஓசூருக்கு திரும்பினர். காரை கார்த்தி ஓட்டி வந்தார்.

ஆர்.கே.பேட்டை அடுத்த வேலன்கண்டிகை அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர புளிய மரத்தில் மோதியது. இதில், சம்பத்குமார், ஸ்டாலின் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

படுகாயம் அடைந்த கண்ணகி, கார்த்தி ஆகியோர், திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கண்ணகி இறந்தார்.

முதலுதவி சிகிச்சைக்கு பின் கார்த்தி, சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து குறித்து, ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement