போலீஸ் செய்திகள்... ::

நண்பரின் மனைவியை தாக்கியவர் கைது

கடமலைக்குண்டு: மயிலாடும்பாறை அருகே பொன்னம்படுகை சுகன்ராஜ் 25. இதே ஊரைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் 25. இருவரும் நண்பர்கள். ஈஸ்வரன் மது குடிப்பதற்காக தினமும் சுகன்ராஜை உடன் அழைத்துச் செல்வது வழக்கம். இதுகுறித்து சுகன்ராஜின் மனைவி காயத்ரி, தனது கணவரை மது குடிக்க கூப்பிடக்கூடாது என்று ஈஸ்வரனை கண்டித்தார். இதனால் இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டது. தகாத வார்த்தைகளால் பேசிய ஈஸ்வரன், காயத்ரியை கையால் தாக்கினார். அங்கிருந்த உறவினர்கள் சத்தம் போட்டு ஈஸ்வரனை விரட்டினர். சம்பவம் குறித்து காயத்திரி புகாரில் போலீசார் ஈஸ்வரனை கைது செய்தனர்.

மனைவி தாக்குதல்: கணவர் கைது

கடமலைக்குண்டு: மயிலாடும்பாறை வண்ணாரப் பேட்டை தெரு ராமச்சந்திரன் 35. கொத்தனார். இவரது மனைவி சுவாதி 29, காளவாசலில் கூலி வேலை செய்கிறார். 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்த இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். மது போதைக்கு அடிமையான கணவர் மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன் தினம் காலையில் சுவாதி காளவாசல் கூலி வேலைக்கு புறப்படும் போது, கணவர் மனைவியை தகாத வார்த்தைகளால் பேசி, கீழே தள்ளி தாக்கினார். பாதிக்கப்பட்ட மனைவி புகாரில் மயிலாடும்பாறை போலீசார் ராமச்சந்திரனை கைது செய்தனர்.

இளம்பெண் மாயம்

ஆண்டிபட்டி: பாலக்கோம்பை தெற்குத் தெரு தமிழரசி 46. இவருக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். மகள் நிவேதா 20, நேற்று முன்தினம் வீட்டை விட்டு சென்றவர் திரும்ப வரவில்லை. பல இடங்களில் தேடியும் உறவினர்களிடம் விசாரித்தும் கண்டுபிடிக்க முடியாததால் தாய் புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது வழக்கு

தேனி: புதிய தமிழகம் கட்சி சார்பில், நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகம் முன் நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்தும், தென் மாவட்டங்களில் தேவேந்திரகுல வேளாளர் இளைஞர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து ஆர்ப்பாட்டம், ரோடு மறியல் நடந்தது. பொது மக்களுக்கு இடையூறாக மறியலில் ஈடுபட்ட மாவட்டச் செயலாளர் சிவக்குமார் மற்றும் 64 ஆண்கள், 55 பெண்கள் உட்பட 120 பேர் மீது தேனி போலீசார் வழக்கு பதிந்தனர்.

பெண் மாயம்

தேனி: அரண்மனைப்புதுார் காளியம்மன் கோவில் திலகவதி இவர் மனநலம் தொடர்பான சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வீட்டில் இருந்து மாயமானார். இவரது சகோதரர் ஹரிகிருஷ்ணன் புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement