மடப்புரம் காளி கோயில் உண்டியலில் வெளிநாட்டு நாணயங்கள், கரன்சிகள்

திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் உண்டியலில் 234 கரன்சி நோட்டுகள், 200 க்கும் மேற்பட்ட நாணயங்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.

மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆடியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவது வழக்கம், கோயில் வளாகத்தில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்த ஒன்பது நிரந்தர உண்டியல்களும், ஒரு கோசாலை உண்டியலும் உள்ளது. 40 நாட்களுக்கு ஒரு முறை உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கையாக செலுத்தப்பட்ட தங்கம் வெள்ளி, ரூபாய் நோட்டு, நாணயங்கள் எண்ணப்படும்.

நேற்று உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம், தங்க நகை , வெள்ளி ஆபரணம் ஆகியவற்றை எண்ணும் பணி சிவகங்கை துணை ஆணையர் சங்கர் தலைமையில் உதவி ஆணையர்கள் கவிதா, கணபதி முருகன் மேற்பார்வையில் நடந்தது.

உண்டியலில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளைச் சேர்ந்த கரன்சி நோட்டுகள், நாணயங்களை பக்தர்கள் செலுத்தி உள்ளனர். இதில் 234 கரன்சி நோட்டுகளும், மஞ்சள் துணியில் சுற்றி 700 கிராம் எடை கொண்ட 200 புத்தம் புதிய நாணயங்களை காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.

இதுதவிர சிங்கப்பூர், மலேசியா நாடுகளைச் சேர்ந்த ரூபாய் நோட்டுகளும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன.

இதில் 21லட்சத்து, 29 ஆயிரத்து 645 ரூபாய் ரொக்கமும், 73 கிராம் தங்கம், 178 கிராம் வெள்ளியும், கோசாலை உண்டியலில் 58 ஆயிரத்து 531 ரூபாய் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர். ஆய்வர் அய்யனார், கண்காணிப்பார் பாஸ்கரன், சி.சி.டி.வி., கண்காணிப்பாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement