ஆக., 15ல் புடினை சந்திக்கிறார் டிரம்ப்; உக்ரைன் நிலத்தை விட்டுக்கொடுக்காது என்கிறார் ஜெலென்ஸ்கி

6

கீவ்: நீண்ட நாட்களாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டுவர புடினை சந்தித்து, அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில், 'எங்கள் நாட்டு நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம்' என அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்து உள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், ஆகஸ்ட் 15ல் ரஷ்ய அதிபரை சந்திக்கவுள்ளதாகப் பேசியிருந்தார். அவருடன், மூன்றரை ஆண்டுகளுக்கு மேல் தொடரும் உக்ரைன் போரை நிறுத்துவது குறித்துப் பேச்சு நடத்துவதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:

அதிபர் டிரம்ப் அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் புடினைச் சந்திப்பது குறித்து பேசியுள்ளார். அது நமது நிலத்தில் நமது மக்கள் மீது நிகழ்த்தப்படும் போரிலிருந்து வெகு தொலைவில் உள்ளது.

நேரடி பேச்சு





உக்ரைன் இல்லாமல் அமைதி ஒப்பந்தங்கள் ஏற்படாது. சந்திப்புகள் அனைத்தும் செயலில்லாத தீர்வுகளையே தரும். போர் நிறுத்தத்தைப் பொறுத்தவரையில் ரஷ்யாவுடன் உக்ரைன் நேரடியாக பேச்சு நடத்தினால் மட்டுமே தீர்வு ஏற்படும்.

கொடுக்க முடியாது



உக்ரைன் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம். உக்ரைன் அமைதியை ஏற்படுத்தும் உண்மையான முடிவுகளை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறது. ஆனால் எங்களுக்கு எதிரான தீர்வுகள் அனைத்தும் அமைதிக்கும் எதிரான தீர்வுகளே ஆகும். அவற்றால் எந்த பயனும் இராது. நமக்கு உண்மையான, மக்களால் மதிக்கப்படும் அமைதி தேவை. இவர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

Advertisement