தேர்தல் வெற்றிக்காக தரப்படும் இலவசங்கள்: யோசித்து செயல்பட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவுரை

40


சென்னை: 'என்னை தேர்தலில் வெற்றி பெற வைப்பதற்காக, உங்களுக்கு இலவசமாக ஏதாவது கொடுப்பேன் என்று சொன்னால், கொஞ்சம் யோசிக்க வேண்டும். இலவசத்தை காட்டி நம்மை ஆளுபவர்கள் கூடுதல் உரிமை எடுக்க விடாதீங்க' என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வலியுறுத்தியுள்ளார்.

தனியார் கல்லூரியில் நடந்த அரசியலமைப்பு தினம் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; நமது அரசியலமைப்பு சட்டத்தின் முக்கிய விஷயம் என்னவென்றால், ஓட்டுரிமை. இது தொடர்பாக மிகப்பெரிய விவாதமே நடத்தப்பட்டது. ஏனெனில், வெளிநாடுகளில் பெண்களினால் தேர்தலில் ஓட்டு கூட போட முடியாது. ஆனால், நமது அரசியலமைப்பு சட்டம் அனைவருக்கும் ஓட்டு போடும் உரிமையை கொடுத்துள்ளது. இது மிகவும் சிறப்பானது. நம் நாடு மக்களாட்சி முறையை கொண்டுள்ளது. ஆனால், நாம் மக்களாட்சி உரிமையை கொடுத்திருந்தாலும், சரியான ஆட்களை தேர்வு செய்கிறோமா? நாம் சரியான ஆட்களைத் தான் ஆள வைக்கிறோமா? என்பதை நாம் யோசித்து பார்க்க வேண்டும். ஆனால், தேர்தல் நாளான்று லீவு போட்டு விட்டு ஊருக்கு போய் விடுகிறோம். சினிமாவுக்கு போய்விடுகிறோம். ஓட்டு போடுவதில்லை. ஆனால், ஏதாவது நடந்தால் வாய் கிழிய பேசுகிறோம்.

ஒவ்வொரு முறையும் எவ்வளவு சதவீதம் ஓட்டு போடுகிறார்கள். 50 சதவீதம் கூட இல்லை. 45 சதவீத ஆட்கள் பூத் பக்கமே போகிறதே இல்லை. அப்போ, ஓட்டுரிமை கொடுப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. அப்படிபட்டவர்கள் ஆட்சி செய்பவர்களைப் பற்றி விமர்சிக்கும் உரிமையை இழக்கின்றனர். இது உரிமை அல்ல, கடமை. கடமைகளை செய்தால் தான் உரிமைகளை தட்டிக் கேட்க முடியும்.

தியேட்டர்களிலும், இசை நிகழ்ச்சிகளிலும் பெரிய வரிசையில் நின்று டிக்கெட் வாங்கிடுறாங்க. ஆனால், தேர்தலின் போது ஒருநாள் வரிசையில் நின்று ஓட்டு போட என்ன கஷ்டம். 18 வயதானவர்கள் ஓட்டு போடலாம். இந்த நாட்டை ஆட்சி செய்ய யார் சரியான ஆள் என்பதை யோசித்து முடிவு செய்ய வேண்டும்.

அரசியலமைப்பு சட்டத்தில் 3 பிரிவுகள் உள்ளன. சட்டத்தை இயற்றுபவர்கள், செயல்படுத்துபவர்கள், நீதியரசர்கள் என 3 வகையில் உள்ளனர். இவர்களில் சட்டத்தை இயற்றுபவர்களைத் தான் மக்கள் தேர்தலில் தேர்வு செய்து அனுப்புகிறார்கள். அரசியலமைப்பு சட்டம் தான் மிகவும் அதிகாரம் கொண்டது. பார்லிமென்ட்டோ, நீதிமன்றமோ கிடையாது.

இலவசம் கொடுத்து கொடுத்து நம்மை ஏமாற்றுகிறார்கள். எதனால், அதனை பண்ணுகிறார்கள் என்று தெரியுமா? பல ஆண்டுகள் நாம் ஆளப்பட்டவர்கள். எனவே, ஒரு அடிமைத்தனம் இருந்து கொண்டு தான் இருக்கும். அடிப்படையில் நம்மிடம் ஒரு பிரச்னை இருப்பதை அறிந்து கொண்டவர்கள் தான், இலவசமாக லேப்டாப் கொடுப்பேன். குக்கர் கொடுப்பேன். சைக்கிள் கொடுப்பேன் என்று சொல்வார்கள்.

இலவசம் என்ற சொன்னால் நாம் எவ்வளவு வசதி இருந்தாலும், வெட்கமே இல்லாமல் போய் நிற்பார்கள். இல்லாதவர்கள் போய் நிற்பதில்லை தவறில்லை. இல்லாதவனுக்கு, கஷ்டப்படுபவனுக்கு எதையாவது கொடுக்கும் போது பரவாயில்லை. ஆனால், என்னை தேர்தலில் வெற்றி பெற வைப்பதற்காக, உங்களுக்கு இலவசமாக ஏதாவது கொடுப்பேன் என்று சொன்னால், கொஞ்சம் யோசிங்க. இலவசத்தை காட்டி நம்மை ஆளுபவர்கள் கூடுதல் உரிமை எடுக்க விடாதீங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement