கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பால் மேடானதால் தண்ணீர் தேக்க முடியாத பரிதாபம் வடமலைக்குறிச்சி கண்மாய் விவசாயிகள் வேதனை

விருதுநகர் : கருவேலமரங்கள் ஆக்கிரமிப்பால் மேடாகி வருவதாலும், களி மண்ணாக இருப்பதால் மண் அள்ளுவதற்கு கூட ஆர்வமில்லாமல் இருப்பதால் தண்ணீர் தேக்கி விவசாயம் செய்ய முடியாத நிலையில் வடமலைக் குறிச்சி கண்மாய் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
பரிதாப நிலை யில் வடமலைக்குறிச்சி கண்மாய் விருதுநகர் - மதுரை மாவட்ட எல்லை அருகே அமைந்துள்ளது வடமலைக்குறிச்சி கண்மாய். இது ஆழமின்றி மேடாகி வருவதுடன், கருவேலம் அடர்ந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில் மூடை மூடையாய் நெல் அறு வடை செய்த நிலை போய், தற்போது கூலிக்கு செல்வதாக வேதனை தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.
விருதுநகர் ஒன்றியத் திற்குள் உள்ள வடமலைக்குறிச்சி ஊராட்சி. மதுரை மாவட்ட எல்லையாக இக்கிராமம் உள்ளது. மதுரை மாவட்ட கிராமங்களில் இருந்து வரும் வரத்து ஓடை நீர் இக்கண்மாயில் சேர்கிறது.
340 ஏக்கர் பரப்பு கொண்ட இக்கண்மாய் நிறைந்து உபரி நீர் கவுசிகா நதியாக ஓடுகிறது. இக்கண்மாயில் தற்போது மடை பழுது சரி செய்யும் பணிகள் நடந்து வருகிறது.
கண்மாய் முழுவதும் மேடாகி கருவேல மரங்கள் சூழ்ந்து விட்டதால் வரும் நீர் தேங்காமல் அப்படியே நதிக்கு சென்று விடுகிறது. இதனால் 2021ல் நிரம்பிய கண்மாய், அதற்கு பிறகு நான்கு ஆண்டுகளாகியும் நிரம்பாமல் உள்ளது.
கடந்தாண்டு வண்டல் அள்ள அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒரு பகுதி மட்டும் எடுக்கப்பட்டுள்ளதால் குறைந்தளவு ஆழம் கிடைத்துள்ளது.
இன்னும் நிறைய விவசாயிகளை இங்கு மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதித்தால் கண்மாய் நிச்சயம் ஆழமாகும். ஆனால் களிமண் அதிகமுள்ள கரிசல் மண் என்பதால் யாரும் மண் அள்ள முன் வருவதில்லை என அதிகாரிகள் கூறு கின்றனர்.
20 ஆண்டுகளுக்கு முன் இக்கண்மாய் நீர் பாசனம் மூலம் மூடை மூடையாய் நெல் அறுவடை செய்யப்பட்டது. இங்கு விளையும் பாகற்காய், வெள்ளரிக் காய்க்கு மவுசு அதிகம். தற்போது விவசாயிகள் விருதுநகர் பகுதிகளுக்கு கட்டட வேலைக்கு வருகின்றனர். இதனால் அவர்களது நன்செய் நிலம் புன்செய் நிலமாகி வருகிறது.
இன்னும் 3 மாதத்தில் பருவமழை துவங்க உள்ளது. கண்மாயை ஆழப்படுத்தி, மடை களை சரி செய்தால் இப்பகுதி விவசாயம் மேம்படும். இல்லையெனில் அடுத்த தலைமுறை புன்செய் நிலங்களோடும், வறண்ட நீர்நிலை களோடும் பரிதவிக்கும் என விவசாயிகள் வேதனைப்படுகின்றனர்.
தொழிலாளிகளாகும்விவசாயிகள் சரவணன், விவசாயி: என் தோட்டத்தில் நெல் அறுவடை செய்து திருமங்கலத்தில் மூடை மூடையாய் அரிசி இறக்குவோம். வடமலைக் குறிச்சி பாகற்காய் வேண்டும் என மார்க்கெட்டில் கேட்டு வாங்குவர். தற்போது அந்த பெயரெல்லாம் போய்விட்டது. புன்செய் நிலங்கள் அதிகரித்து விட்டன. விவசாயிகள் பலர் கட்டட தொழிலாளிகளாக மாறி வருகின்றனர்.
மழைக்கு முன் நடவடிக்கை ரமேஷ்கண்ணன், விவசாயி: கண்மாயின் வரத்து ஓடைகளை துார்வார வேண்டும். தற்போது நடக்கும் மடை பணிகளை மழைக்கு முன் முடிக்க வேண்டும். கருவேல மரங்களில் காட்டுப் பன்றிகள், மான்கள் மறைந்து நின்று தற்போது செய்யும் குறைந்த அளவிலான விவசாயத்திற்கும் வேட்டு வைக்கிறது. இதையும் கட்டுப்படுத்த வேண்டும்.
ஆழப்படுத்த வேண்டும் தங்கமாரி, ஒன்றிய செயலாளர், புதிய தமிழகம்: கண்மாயை ஆழப் படுத்தும் பணிகளை பருவ மழைக்கு முன் செய்ய வேண்டும். குறைந்த பட்சம் தேக்கும் திறனாவது வேண்டும். எங்கள் பகுதியின் முக்கிய நீராதாரமே இக்கண்மாய் தான். விவசாயிகள் வாழ்வு வளம் பெற இக்கண்மாயை ஆழப்படுத்த வேண்டும்.
ரூ. 36 லட்சத்தில் பணிகள் மலர்விழி, செயற்பொறி யாளர், வைப்பாறு வடிநிலக் கோட்டம்: இக்கண்மாயை சீரமைக்க ரூ.36 லட்சம் ஒதுக்கப்பட்டு இரு மடைகளை சரிபார்க்கும் பணிகள் நடந்து வருகிறது. கலுங்குகள், தண்ணீர் விழும் பகுதிகள், சுவர் சேதமான பகுதிகள் சரி செய்யப்பட்டு வரு கின்றன. வரத்துக் கால்வாய் 8.1 கி.மீ.,க்கு உள்ளது. இவையும் சரி செய்யப்பட உள்ளன.