யூடியூபர் வீட்டில் துப்பாக்கிச்சூடு: பஞ்சாபில் பரபரப்பு

1

ஹோஷியார்பூர்: பஞ்சாப் யூடியூபர் ஒருவரின் வீட்டில் அடையாளம் தெரியாத 2 பேர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் மாநிலம் மாடல் டவுனில் வசிப்பவர் சிம்ரன் சிகண்ட். இவர் யூடியூபராக உள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், அவரது வீட்டின் வாசலில் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிவிட்டனர். நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் அடையவில்லை. தகவல் அறிந்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடந்த இடத்திற்கு விரைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து மாடல் டவுன் போலீஸ் அதிகாரி குர்சாஹிப் சிங் கூறியதாவது:

துப்பாக்கிச்சூடு சம்பவம் இன்று காலையில் நடந்தது. நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. சம்பவம் நடந்த இடத்தில் பயன்படுத்தப்பட்ட இரண்டு தோட்டாக்கள் மீட்கப்பட்டது.

சில மாதங்களுக்கு முன், சிம்ரன் சிகண்ட் சமூக ஊடகங்களில் ஒரு மதப் பதிவில் கருத்து தெரிவித்ததாகவும், இதற்கு கனடாவில் வசிக்கும் பாகிஸ்தானியரான முகமது செஹ்யாத் பட்டி மற்றும் ஹோஷியார்பூரைச் சேர்ந்த தல்பீர் சிங் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து ஆன்லைனில் வாக்குவாதம் செய்தனர்.

இந்த விவகாரத்தில் முகமது செஹ்யாத் பட்டி, யூடியூபர் வீட்டிற்கு கையெறி குண்டு வீசுவதாக மிரட்டியதை தொடர்ந்து, அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

இவ்வாறு குர்சாஹிப் சிங் கூறினார்.

Advertisement