ரூ.4 கோடியில் படித்துறை சீரமைக்கும் பணி கனமழையால் தற்காலிகமாக நிறுத்தம்

காசியை விட வீசம் அதிகம் விருத்தகாசி என்ற ஆன்மிக ஐதீகம் கொண்டது விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில். மேலும், மாசிமக பிரம்மோற்சவத்தின்போது, 1 லட்சத்துக்கும் அதிகமானோர் மணிமுக்தாற்றில் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்துவிட்டு, விருத்தகிரீஸ்வரர் சு வாமியை வழிபடுவது வழக்கம்.

இந்நிலையில், கனமழை காலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது மட்டுமே மணிமுக்தாற்றில் நீர்வரத்து இருக்கும். மற்ற நாட்களில் நீர்வரத்து இல்லாமல் ஆறு வறண்டு காணப்படும்.

ஆனால், நகரில் உள்ள குடியிருப்புகள், மருத்துவமனைகள், வணிக வளாகங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் அனைத்தும், ராட்சத வடிகால் வழியாக மணிமுக்தாற்றில் விடப்படுகிறது.

மாசிமக திருவிழாவின்போது, நகராட்சி நிர்வாகம் தேங்கி நிற்கும் கழிவுநீரை வெளியேற்றி, அந்த பகுதியை தற்காலிகமாக சுத்தம் செய்வது தொடர்கதையாக உள்ளது.

மணிமுக்தாற்றின் கரையோரம், சித்தி விநாயகர் கோவில் அருகே உள்ள ஆயிரம் ஆண்டு பழமையான சோழர்காலத்து படித்துறை வழியாக இறங்கி, பக்தர்கள் நீராடுவது வழக்கம். 400 மீட்டர் துாரம் உள்ள படித்துறையை சீரமைப்பது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள், நகராட்சி நிர்வாக அதிகாரிகளிடம் கடந்த 2023ம் ஆண்டு ஆலோசனை நடத்தினர்.

அதில், 6 கோடி ரூபாய் வரை செலவாகும் என திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. ஆனால், முதல் கட்டமாக ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, 100 மீட்டர் படித்துறை கடந்த 6 மாதங்களுக்கு முன் சீரமைக்கப்பட்டது.

மீதமுள்ள சேதமடைந்த படித்துறை ரூ.4 கோடி மதிப்பில் சீரமைக்கும் பணி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் துவங்கி நடந்து வருகிறது.

இந்நிலையில், பணிகள் துவங்கியபோது, விருத்தாசலம் பகுதியில் கனமழை பெய்ததால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சீரமைப்பு பணிகள் தடைபட்டது.

அதைத்தொடர்ந்து படித்துறை பகுதியில் தே ங்கியிருந்த தண்ணீரை ரட்சத மோட்டார் மூலம் வெளியேற்றி பணிகள் நடந்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையினால், மீண்டும் பணிகள் நடைபெறும் பகுதியில் காட்டாற்று வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், தற்காலிகமாக படித்துறை பணி நிறுத்தி வைக்கப்பட் டுள்ளது.

Advertisement