ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை தொய்வு; கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்ற எதிர்பார்ப்பு

திருப்பூர்; சுதந்திர தினத்தன்று நடத்தப்படும் கிராம சபையில், 'சுற்றுச்சூழல் சுதந்திரம்' என்ற அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சியில், குப்பை கொட்ட இடமில்லாததால் சுற்றியுள்ள கிராம ஊராட்சிகளில் உள்ள காலாவதியான பாறைக்குழிகளில் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இதற்கு ஆங்காங்கே உள்ள மக்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், வார்டுகளில் சேகரிக்கப்பட்ட குப்பையை கொட்ட இடமில்லாமல் திணறி வருகிறது, மாநகராட்சி நிர்வாகம்.

இது குறித்து, தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில சட்டப்பிரிவு அணி செயலாளர் சதீஷ்குமார் கூறியதாவது:

திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம், சுற்றியுள்ள கிராம ஊராட்சிகளில் உள்ள பாறைக்குழியில் குப்பைக்கொட்டுவது, ஏற்புடையதல்ல; இதனால், சுற்றுப்புற சூழல் வெகுவாக பாதிக்கிறது; நிலத்தடி நீர் மாசுபடுகிறது. அதே போன்று சுற்றியுள்ள கிராம ஊராட்சிகள் மட்டுமின்றி, மாநிலத்தின் பல இடங்களில் உள்ள உள்ளாட்சி நிர்வாகங்கள், குப்பை மேலாண்மையில் திணறி வருகின்றன.

வரும், 15ம் தேதி கிராம ஊராட்சிகளில் கிராம சபைக்கூட்டம் நடக்கிறது. இதில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை திறம்பட செயல்படுத்துவது தொடர்பாக, தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

ஒவ்வொரு வீட்டில் இருந்து, குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்கி, முறைப்படி கையாள்வது போன்ற பணிகள் குறித்து முடிவெடுக்க வேண்டும். தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்துவது தொடர்பாக விவாதித்து, 'சுற்றுச்சூழல் சுதந்திரம்' என்ற அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement