நஷ்டத்தை எதிர்கொண்ட உலர்கள உரிமையாளர்கள்

பொங்கலுார்; இந்த ஆண்டு தேங்காய் விலை வரலாறு காணாத அளவு உச்சம் தொட்டது. ஒரு கிலோ கொப்பரை, 265 ரூபாய் வரை விலை போனது.

கொப்பரை விலை உயர்வைத் தொடர்ந்து தேங்காய் விலை உச்சம் தொட்டது. தோப்புகளில் ஒரு காய், 30 முதல் அதிகபட்சம், 40 ரூபாய் வரை வியாபாரிகள் கொள்முதல் செய்தனர்.

தேங்காய் வர்த்தகத்தில் விவசாயிகள், உலர்கள மற்றும் ஆயில் மில் உரிமையாளர்கள், விற்பனையாளர்கள் என சங்கிலித் தொடராக பலரது கைகளுக்குச் சென்று இறுதியில் நுகர்வோரை அடைகிறது. இதில் உலர்கள உரிமையாளர்களைத் தவிர மற்றவர்கள் அதிக நாட்கள் இருப்பு வைக்காமல் குறிப்பிட்ட நாட்களில் மற்றவர்களுக்கு விற்பனை செய்து விட முடியும்.

கொப்பரை தயாரிப்பு குடிசைத் தொழிலாக உள்ளதால் தேங்காயை கொப்பரையாக மாற்றுவதற்கு மாதக்கணக்கில் ஆகிறது. கொப்பரை விலை சரசரவென சரிந்து தற்பொழுது, 200க்கும் கீழ் சென்று விட்டது. தேங்காய் விலையும், 25 ரூபாயாக சரிந்து விட்டது. சராசரியாக, 35 ரூபாய்க்கு தேங்காயை வாங்கிய உலர்கள உரிமையாளர்கள் இன்னும் கொப்பரையாக மாற்ற முடியவில்லை. அதற்குள்ளாக ஒரு தேங்காய்க்கு பத்து ரூபாய் சரிந்து விட்டது.

இதனால் உலர்கள உரிமையாளர்களுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சிறிய வியாபாரிகள் மிகப்பெரிய நஷ்டத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் கடன் சுமையில் மூழ்கியுள்ளனர்.

Advertisement