டிசம்பரில் இந்தியா வருகிறார் அர்ஜென்டினா நட்சத்திர வீரர் மெஸ்ஸி: பிரதமர் மோடியையும் சந்திக்கிறார்

கோல்கட்டா: அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி 3 நாட்கள் பயணமாக இந்தியா வர உள்ளார். இந்த பயணத்தின் போது அவர் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். ஆனால், அவர் கேரளா செல்வாரா என்பது குறித்த தகவல் ஏதும் இல்லை.
அர்ஜென்டினா அணிக்கு உலகக் கோப்பை சாமபியன் பட்டம் உள்ளிட்ட பல கோப்பைகளை பெற்றுத் தந்தவர் மெஸ்ஸி. இவருக்கு உலகம் முழுதும் ரசிகர்கள் உள்ளனர். அமெரிக்காவின் மியாமியில் உள்ள மேஜர் லீக் கால்பந்து கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மெஸ்ஸி இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியானது. அவரது வருகையை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்நிலையில், அவரது இந்திய பயணம் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது. வரும் டிசம்பர் மாதம் 12ம் தேதி கோல்கட்டா வர உள்ளார். இந்த பயணத்தின் போது, கால்பந்து விளையாட்டில் அவர் கொண்ட உறுதிப்பாட்டை பாராட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் மெஸ்ஸி பங்கேற்க உள்ளார்.
கோல்கட்டாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் பாராட்டு விழாவிலும் மெஸ்ஸி கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மம்தா பானர்ஜியும் பங்கேற்க உள்ளார். ஈடன் கார்டனில் தலா 7 பேர் கொண்ட அணி பங்கேற்கும் கால்பந்து தொடரும் நடக்க உள்ளது. அங்கு, குழந்தைகளுக்கான கால்பந்து தொடர்பான பயிற்சியிலும் கலந்து கொள்கிறார்.
இதன் பிறகு மும்பை, ஆமதாபாத்துக்கும் செல்கிறார். மும்பையின் வான்கடே மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சியிலும் மெஸ்ஸி பங்கேற்க உள்ளார். இந்த நிகழ்ச்சிக்காக ஒருங்கிணைப்பாளர்கள் அனுமதி கேட்டு உள்ளனர். இதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாகவும், இதனை பார்க்க வரும் ரசிகர்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.
இதன் பிறகு கடைசியாக 15ம் தேதி தலைநகர் டில்லிக்கு செல்கிறார். அங்கு பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். இதன் பிறகு அவர் சொந்த நாட்டுக்கு கிளம்பி செல்கிறார்.
மெஸ்ஸி உள்ளிட்ட அர்ஜென்டினா அணி வீரர்களை கேரளா அழைத்து வருவதற்கு அம்மாநில அரசு தீவிரமாக முயற்சி செய்தது. இதற்காக ரூ.130 கோடி பணம் அந்நாட்டு கால்பந்து சங்கத்திடம் கொடுக்கப்பட்டு இருந்தது. வீரர்களின் பயணம் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன், டில்லி சென்று அர்ஜென்டினா தூதரை சந்தித்து பேசியிருந்தார்.
கடந்த ஆண்டு அக்., மற்றும் நவம்பர் மாதம் திருவனந்தபுரம் மைதானத்தில் நட்பு ரீதியில் நடக்கும் போட்டியிலும் மெஸ்ஸி பங்கேற்பார் எனவும் அம்மாநில அரசு அறிவித்து இருந்தது. ஆனால், திட்டமிட்டபடி அந்த அணி இதுவரை வரவில்லை. விதிமுறைகளை அர்ஜென்டினா கால்பந்து சங்கம் மீறவிட்டதாக கேரள அரசு குற்றஞ்சாட்டியிருந்தது. மெஸ்ஸி மற்றும் கேரள அரசை கண்டித்தும் அம்மாநிலத்தில் ஆங்காங்கே போராட்டம் நடந்து வருகிறது.
தற்போது மெஸ்ஸி இந்தியா வருகை குறித்து அறிவிக்கப்பட்டு இருந்தாலும், அதில் அவர் கேரளா செல்வது தொடர்பான அறிவிப்பு ஏதுமில்லை. இது கேரள மாநில கால்பந்து ரசிகர்கள் இடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது.
மேலும்
-
டிரம்ப்-புடின் சந்திப்பில் எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகாது: ரஷ்யா திடீர் அறிவிப்பு
-
நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் காலமானார்
-
குவைத்தில் கள்ளச்சாராயத்தால் விபரீதம்: 51 பேருக்கு டயாலிசிஸ், 21 பேருக்கு பார்வையிழப்பு
-
நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகமே: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
ஹூமாயூன் கல்லறையில் தர்ஹா மேற்கூரை சரிந்து 5 பேர் உயிரிழப்பு
-
ஐகோர்ட்டை விட சுப்ரீம் கோர்ட் மேலானது அல்ல: தலைமை நீதிபதி கவாய்