ஆவடி அருகே ரூ.2,000த்துக்காக முதியவர் கொலை: இருவர் கைது

ஆவடி,மது அருந்தி கொண்டிருந்த முதியவரை தனியாக அழைத்துச் சென்று, கொலை செய்து, அவரிடம் இருந்த 2,000 ரூபாயை பறித்து சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

ஆவடி, கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் கோபால், 68; காவலாளி. காமராஜர் நகர் பகுதியில் உள்ள மதுக் கூடத்தில், நேற்று முன்தினம் மதியம் மது அருந்தி கொண்டிருந்தார்.

அவரது சட்டை பையில் பணம் இருப்பதை, அருகே அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்த, அதே பகுதியைச் சேர்ந்த சீனு, 28, ஆவடி, ஸ்ரீ தேவி நகரைச் சேர்ந்த விஜயகுமார், 32, இருவரும் நோட்டமிட்டனர்.

பின், கோபாலிடம் பேச்சு கொடுத்து, அவரை ஆவடி, சேர்க்காடு அருகே அழைத்துச் சென்று, மூவரும் ஒன்றாக மது அருந்தினர்.

அப்போது, கோபால் தனக்கு மட்டும் அதிகமாக மது ஊற்றிக்கொண்டதாக கூறி, அவரது முகம் மற்றும் கழுத்தில் சரமாரியாக குத்தினர். நிலை குலைந்து விழுந்த கோபால், அங்கேயே உயிரிழந்தார்.

பின், கோபாலிடம் இருந்த, 2,000 ரூபாயை எடுத்துக் கொண்டு இருவரும் தப்பினர்.

இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் ஆவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆவடி போலீசார் வழக்கு பதிந்து, 2,000 ரூபாய்க்காக முதியவரை கொலை செய்த, சீனு, விஜயகுமார் ஆகிய இருவரையும் நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Advertisement