சென்னையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

சென்னை, நாட்டின் 79வது சுதந்திர தின விழா, சென்னை முழுதும் நேற்று கொண்டாடப்பட்டது.

சென்னை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவில், கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தேசியக் கொடியை ஏற்றினார். பின், போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, சென்னையில் வசிக்கும் சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்தார்.

விழாவில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், பிற்படுத்தப்பட்டோர், 'தாட்கோ' உள்ளிட்ட பல்வேறு துறைகளில், 59 பயனாளிகளுக்கு, 23.36 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

தொடர்ந்து, வருவாய், மக்கள் நல்வாழ்வு, பள்ளிக்கல்வி, பொதுப்பணி உட்பட பல துறைகளில் சிறப்பாக பணியாற்றிய, 263 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

பொது விருந்து ஹிந்து சமய அறநிலையத்துறையின் சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட 31 கோவில்களில், சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடத்தப்பட்டது.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நடந்த பொது விருந்தில், துணை முதல்வர் உதயநிதி, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் பங்கேற்று, பக்தர்களுடன் இணைந்து உணவு அருந்தினர். தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு வேட்டி, சேலைகளை வழங்கினர்.

வடபழனி முருகன் கோவிலில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவிலில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் பங்கேற்றனர்.

தாம்பரம் மாநகர காவல் ஆயுதப்படை தலைமையகத்தில், கமிஷனர் அபின் தினேஷ் மோதக் தேசிய கொடி ஏற்றி, மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, துாய்மை மற்றும் பராமரிப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த சேலையூர், சங்கர் நகர், குரோம்பேட்டை ஆகிய காவல் நிலையங்களுக்கு, கோப்பைகளை வழங்கினார்.

ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில், ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் நேற்று, தேசிய கொடியை ஏற்றினார். தொடர்ந்து, கொடி அணிவகுப்பு மற்றும் போலீசாரின் சாகச நிகழ்ச்சிகள் நடந்தன. அதேபோல், ஆவடி மாநகராட்சி வளாகத்தில், ஆவடி துணை மேயர் சூர்யகுமார் தேசிய கொடி ஏற்றினார்.

ரூ.18 கோடி செலவு அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு சித்தா மருத்துவமனை வளாகத்தில், மருத்துவமனை கண்காணிப்பாளர் ராதிகா தேசிய கொடியேற்றினார். சிறப்பாக பணிபுரிந்த பணியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்கள் சார்பில், தண்டையார்பேட்டையில் உள்ள பாபு ஜெகஜீவன் ராம் நினைவு விளையாட்டு அரங்கில், சுதந்திர தின விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

அங்கு, துறைமுகங்களின் தலைவர் சுனில் பாலிவால், தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். பின், மூவர்ண பலுான்களையும், புறாக்களையும் பறக்கவிட்டார்.

துறைமுக தலைவர் சுனில் பாலிவால் கூறியதாவது:

கடந்த நிதியாண்டில், சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்கள் இணைந்து, 103 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு சாதனை படைத்துள்ளது. இந்த நிதியாண்டில் சரக்குகளை கையாள்வதில் 13.25 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது.

இது கடந்த ஆண்டைவிட இரு மடங்கு ஆகும். சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்களின், சி.எஸ்.ஆர்., திட்டத்தின் கீழ், 18 கோடி ரூபாய் செலவில் பல்வேறு திட்டங்களை செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல், அரசு மருத்துவமனைகள், மெட்ரோ ரயில் நிலையங்கள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களிலும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

@block_B@

தாம்பரத்தில் தேசிய கொடி ஏற்றினார் மேயர் வசந்தகுமாரி

தாம்பரம் மாநகராட்சியில் நடந்த சுதந்திர தின விழாவில், மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் தலைமையில், மேயர் வசந்த குமாரி, தேசிய கொடியை ஏற்றினார். தொடர்ந்து சமூக சேவை பணிக்காக, சமூக ஆர்வலர்கள் சந்தானம், முருகையன், கெஜன்நாதன் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். மாநகராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களின் பிள்ளைகளில் 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ - மாணவியருக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், மாநகராட்சி பள்ளிகளில் பொது தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ - மாணவியருக்கு முறையே 30,000, 20,000, 10,000 ரூபாய்; பாடத்தில் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஒரு பாடத்திற்கு 1,000 ரூபாய் என ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. தவிர 100 சதவீதம் தேர்ச்சி பெற்று தந்த, 41 மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு, தலா 10 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மாநகராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த துாய்மை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.block_B

Advertisement