கிரீன் சாம்பியன்: 'வெற்றி' ஹாட்ரிக்

திருப்பூர்; திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடத்திய சுதந்திர தின விழாவில், 'வெற்றி' அறக்கட்டளை மற்றும் 'மழை உடுமலை' அமைப்புகளுக்கு, 'கிரீன் சாம்பியன்' விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில், பசுமை பணிகளை பாராட்டி, 'கிரீன் சாம்பியன்' என்ற விருது வழங்கப்படுகிறது. திருப்பூர் 'வெற்றி' அமைப்பு இருமுறை ஏற்கனவே 'கிரீன் சாம்பியன்' விருதைப் பெற்றுள்ளது.

மூன்றாவது முறையாக, நேற்றும் 'கிரீன் சாம்பியன்' விருது வழங்கப்பட்டது. 'வெற்றி' அறக்கட்டளை சார்பில், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், 10 ஆண்டுகளில், 22 லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்படுகிறது; 11வது திட்டத்தில், மூன்று லட்சம் இலக்குடன் பசுமை பயணம் துவங்கி, 1.24 லட்சம் மரக்கன்றுகள் இதுவரை நட்டு முடிக்கப்பட்டுள்ளது.

'மழை உடுமலை' அமைப்பு, உடுமலை சுற்றுப்பகுதிகளில், மரம் வளர்ப்பு மற்றும் பசுமை பாதுகாப்பு பணிகளை செய்து வருகிறது. அதனை பாராட்டி, இந்தாண்டு இவ்விரு அமைப்புகளுக்கும், 'கிரீன் சாம்பியன்' விருது வழங்கப்பட்டது.

மாவட்ட போலீஸ்எஸ்.பி., கிரிஸ் அசோக் யாதவ் முன்னிலையில், கலெக்டர் மனிஷ் நாரணவரே, அமைப்பினருக்கு, 'கிரீன் சாம்பியன்' விருதையும், ஊக்கத்தொகை, தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலைகளையும் வழங்கினார்.

'வெற்றி' அமைப்பின் நிர்வாகிகள், சீதாராமன், கண்ணதாசன், ரத்தன் வித்யாசாகர், 'மழை உடுமலை' நிர்வாகிகள் கருணாநிதி, வர்ஷினி இளங்கோ, ஜவஹர் ஆகியோர், இந்த விருதினை பெற்றுக்கொண்டனர்.

Advertisement