அரசு பள்ளி மாணவி நீச்சலில் சாதனை

நங்கநல்லுார் :ஜெயகோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த பிளஸ் 2 மாணவி வேதா ஜெயபால், நீச்சல் போட்டியில் மாநில அளவில் முதலிடமும், தேசிய அளவிலான போட்டியில் எட்டாம் இடமும் பிடித்துள்ளார்.

நங்கநல்லுாரை சேர்ந்த ஜெயபால்- - ரேவதி தம்பதியின் இரண்டாவது மகள் வேதா, 16; ஜெயகோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.

இவர், ஜூனியர் பிரிவு நீச்சல் போட்டியில், தமிழக அளவில் தங்க பதக்கம் வென்றார். சமீபத்தில் பெங்களூருவில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் எட்டாம் இடம் பிடித்துள்ளார்.

போட்டியில் வென்ற தங்கப் பதக்கம், சான்றிதழுடன் பள்ளி தலைமை ஆசிரியை நிர்மலாவிடம் ஆசி பெற்றார். அவரை ஆசிரியைகள், சக மாணவியர் பாராட்டினர்.

இதுகுறித்து வேதா ஜெயபால் கூறியதாவது:

நான் 6ம் வகுப்பு முதல் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். என் சகோதரி சிண்ட்ரெல்லா நீச்சல் போட்டியில், தேசிய அளவில் நான்காம் இடம் பிடித்தார். அவரைப்போல நீச்சலில் சாதிக்க ஆசை. கடந்த ஆண்டு தேசிய அளவில் மூன்றாம் இடம் பிடித்தேன்.

இந்த முறை பிளஸ் 2 தேர்வில் கவனம் செலுத்துவதால், முறையாக பயிற்சி எடுக்க முடியவில்லை. இருப்பினும் மாநில அளவில் தங்கப் பதக்கமும், தேசிய அளவில் எட்டாவது இடமும் பிடித்துள்ளேன். வரும் காலத்தில் ஒலிம்பிக்கில் இடம் பெறுவது என் லட்சியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement