தபால் நிலையங்களில் வணிக நேரம் நீடிப்பு

கோவை; வாடிக்கையாளர்களின் வசதி மற்றும் சேவையை மேம்படுத்த, தபால் துறை நட வடிக்கை எடுத்து வருகிறது.

இதன் ஒரு கட்டமாக, வட்டங்கள், பிராந்தியங்கள், பெருநகரங்கள், எம்.எஸ்.எம்.இ., இ--காமர்ஸ், கிளஸ்டர்கள், மாவட்ட தலைமையகங்களில், கவுன்டர் வணிக நேரங்களை நீட்டிக்க, பொருத்தமான தபால் நிலையங்களை அடையாளம் கண்டு தெரிவிக்குமாறு, அனைத்து போஸ்ட் மாஸ்டர் ஜெனரல்களுக்கும், தபால் துறை டைரக்டர் ஜெனரல் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தார்.

தபால், முன்பதிவு தபால், விரைவு தபால் சேவை எங்கெங்கு அதிகம் நடக்கிறது என்ற பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக, சென்னை போன்ற பெருநகரங்களில், திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள தி.நகர் தலைமை தபால் நிலையம், காலை 8:00 மணியிலிருந்து இரவு 8:00 மணி வரை செயல்படுகிறது. இங்கு இரவு 10:--00 மணி வரை பணி நேரம் நீட்டிக்கப்படுகிறது. மயிலாப்பூர் தலைமை தபால் நிலையம், இரவு 9:00 மணி வரையும், தேனாம்பேட்டை துணை தபால் நிலையம், காலை 10:00 முதல் மாலை 6:30 மணி வரையும் செயல்படுமாறு நேர நீட்டிப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இங்கு மேற்கொள்ளும் பணிகளை பொறுத்து, மற்ற நகரங்களில் விரைவில் அமல்படுத்தவும், தபால் துறை முடிவு செய்துள்ளது.

Advertisement