தோல்வியை மூடி மறைக்க காங்கிரஸ் நடத்தும் நாடகம் ; ஜிகே வாசன் குற்றச்சாட்டு

5


கோவை: தோல்வியை மூடி மறைப்பதற்காகவே, தேர்தல் ஆணையத்திற்கு எதிராக காங்கிரஸ் நாடகம் நடத்துவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக கோவையில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது; இந்தியா உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு. இந்த ஜனநாயக நாட்டில் ஜனநாயகத்தை எதிர்த்து செயல்பட கூடிய வகையில் எல்லோருக்கும் சுதந்திரம் இருக்கிறது. அந்த சுதந்திரத்தை தான் தற்போது காங்கிரஸ் கட்சி அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

தேர்தல் ஆணையம் என்பது இந்திய மக்களுக்கு, கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, நல்ல அரசை, மக்கள் விரும்பும் அரசை, மக்கள் தேர்ந்தெடுக்கக்கூடிய நிலையை ஏற்படுத்துவதற்கான ஒரு நடுநிலையான ஆணையம். அத்தகைய தேர்தல் ஆணையத்தை தொடர்ந்து குற்றம் கூறி, ஒரு பொய்யை தொடர்ந்து கூறினால் உண்மையாகிவிடும் என நினைத்து காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தலைவர்கள் செயல்படுத்த தொடங்கினால், அதன் உள்ளர்த்தம் நடைபெறுகின்ற சட்டசபை தேர்தலில் தெரியும்.

காங்கிரஸ் கூட்டணி மிக மிக பலவீனமாக உள்ளது. தோல்வியை அவர்கள் உறுதி செய்து கொள்கிறார்கள். அதனை மூடி மறைக்க ஒரு மிகப்பெரிய நாடகமாக இது நடக்கிறது. இது ஜனநாயகத்திற்கு எதிரானது என குற்றம் சாட்ட விரும்புகிறேன். இதனை சாதாரண வாக்காளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை, இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement