காலிங்பெல்லை தொடர்ந்து அழுத்தியதால் ஆத்திரம்: டெலிவரி நபர் மீது துப்பாக்கிச்சூடு

1

மும்பை; மும்பை அருகே டெலிவரி கொடுக்க வந்த வாலிபரை ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



இதுபற்றிய விவரம் வருமாறு;


லோயர் பரேல் பகுதியில் வசித்து வருபவர் அவினாஷ்குமார் சிங். இவர் உள்ளூர் மருந்து கடை ஒன்றில் சில மருந்துகளை ஆர்டர் செய்துள்ளார். இதையடுத்து, அந்த மருந்துகளை எடுத்துக் கொண்டு, சவுரவ் குமார் என்பவர், அவினாஷ்குமார் சிங் வீட்டுக்கு வந்துள்ளார்.


பின்னர் வீட்டின் கதவுக்கு வெளியே நின்றபடி, அழைப்புமணியின் பொத்தானை அழுத்தி உள்ளார். விட்டினுள் இருந்து எவ்வித பதிலும் இல்லாமல் போகவே, சந்தேகம் அடைந்த சவுரவ் குமார் பலமுறை அழைப்புமணியின் பொத்தானை அடித்த வண்ணம் நின்றிருக்கிறார்.


இவரின் செய்கையால் வீட்டில் இருந்த அவினாஷ்குமார் சிங் கடும் எரிச்சல் அடைந்தார். கோபம் கொப்பளிக்க வெளியே வந்த அவர், தாம் மருந்துகளை ஆர்டர் செய்யவில்லை என்று மறுத்துள்ளார்.


ஒரு கட்டத்தில் கடும் ஆத்திரம் அடைந்த அவர், தாம் வைத்திருந்த ஏர்கன் (சிறிய துப்பாக்கி) ஒன்றை பயன்படுத்தி, சவுரவ் குமாரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். ஆனால், அதில் இருந்து தோட்டா குறிதவறி வானில் பறந்துவிட்டது.


இதுகுறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement