அனுராக் தாக்கூரிடம் பிரமாண பத்திரம் கேட்டீர்களா: தேர்தல் கமிஷனை கேட்கிறார் ராகுல்

அவுரங்காபாத்: 'ஓட்டு திருட்டு குறித்து பேசியதால் தேர்தல் ஆணையம் என்னிடம் ஒரு பிரமாணப் பத்திரத்தை கேட்கிறது. ஆனால் பாஜ எம்பி அனுராக் தாகூர் இதே மாதிரியான கருத்தைச் சொன்னால், அவரிடம் எந்த பிரமாணப் பத்திரமும் கேட்பதில்லை,' என்று லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
பீஹார் வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பீஹாரில் வாக்காளர்களின் ஓட்டுரிமையை உறுதி செய்யும் வகையிலும், 'வாக்காளர் உரிமை' என்ற பெயரில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் இன்று யாத்திரையை துவங்கினார். இதில் பீஹார் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அவுரங்காபாத்தில் ராகுல் பேசியதாவது; மஹாராஷ்டிராவில் நடந்த லோக் சபா தேர்தலில் இண்டி கூட்டணி வெற்றி பெற்றது. அதன்பிறகு, 4 மாதங்கள் கழித்து இதே மஹாராஷ்டிராவில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில், பாஜ கூட்டணி முழு வெற்றியை பெற்றது. எங்களின் கூட்டணி காணாமல் போய் விட்டது. இது பற்றி விசாரணை நடத்தியதில், 4 மாதங்களில் ஒரு கோடி வாக்காளர்களை உருவாக்கி தேர்தல் ஆணையம் மேஜிக் செய்துள்ளது.
எங்கெல்லாம் புது வாக்காளர்கள் வந்துள்ளார்களோ, அங்கெல்லாம் பாஜ வெற்றி பெற்றுள்ளது. எங்களின் ஓட்டு குறையவில்லை. லோக் சபா தேர்தலில் பெற்ற ஓட்டுகளை, சட்டசபை தேர்தலிலும் இண்டி கூட்டணி பெற்றுள்ளது. புதிய ஓட்டுகளை பாஜ பெற்றுள்ளது. இது தான் எங்களுக்கு சந்தேகத்தை உருவாக்கியது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டோம். ஒரு கோடி வாக்காளர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதை கேட்டோம். ஆனால், தேர்தல் ஆணையம் விளக்கம் கொடுக்க மறுத்து விட்டனர்.
எங்களுக்கு நீங்கள் விளக்கம் அளிக்க வேண்டாம். சட்டவிதிகளுக்குட்பட்டு பூத்களில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை கொடுக்குமாறு கேட்டோம். ஆனால், அதற்கும் மறுப்பு தெரிவித்து விட்டனர். இதனால், வாக்காளர் பட்டியலை தர கேட்டோம். ஆனால், டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வழங்க மறுத்து விட்டனர்.
தேர்தல் ஆணையமும், பாஜவும் இணைந்து மத்திய பெங்களூருவில் ஓட்டு திருட்டில் ஈடுபட்டனர். நான் உங்களுக்கு உத்தரவாதத்துடன் சொல்கிறேன். தேர்தல் ஆணையம் என்னிடம் ஒரு பிரமாணப் பத்திரத்தை கேட்கிறது. ஆனால் அனுராக் தாகூர் இதே கருத்தைச் சொன்னால், அவரிடம் எந்த பிரமாணப் பத்திரமும் கேட்பதில்லை, இவ்வாறு அவர் கூறினார்.










மேலும்
-
அவசர கட்டுப்பாட்டு மையத்தை நவீனமாக்குது நெடுஞ்சாலை ஆணையம்
-
தெருநாய்களை விரட்டி அடித்த 'சொட்டு நீலம்' கலந்த தண்ணீர்
-
சூதாட்டம் 14 பேர் கைது
-
கொடுத்த அவகாசம் முடிந்தும் 27 பணிகள் நிலுவை; 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் நகராட்சிகள் மெத்தனம்
-
ஆசிரியையிடம் செயின் பறித்த திருச்சி பலே திருடன் கைது
-
பா.ம.க., பொதுக்குழு தீர்மானங்கள்