தெருநாய்களை விரட்டி அடித்த 'சொட்டு நீலம்' கலந்த தண்ணீர்

16

தாவணகெரே: கர்நாடக மாநிலம், தாவணகெரே நகரில், சொட்டு நீலம் கலந்த தண்ணீர் பாட்டில்களை வீட்டு வாசலில் வைப்பதால், தெரு நாய்கள் தொல்லை குறைந்துள்ளது.

கர்நாடக மாநிலம், தாவணகெரே நகரின், கே.டி.ஜே., நகரில் தெரு நாய்களின் தொல்லையால் மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். சாலையில் நடந்து செல்ல முடியவில்லை.

பயனில்லை

குழந்தைகள், தெருவில் விளையாட முடியவில்லை. மேலும், வீடுகள் முன் நாய்கள் அசுத்தம் செய்து வந்தன.

நடைபயிற்சி செய்யும் மூத்த குடிமக்கள், சிறார்களை நாய்கள் கடித்த சம்பவங்களும் அடிக்கடி நடந்தன. மாநகராட்சிக்கு புகார் அளித்தும் பயன் இல்லை. இதற்கிடையே இப்பகுதி மக்களே, நுாதன வழியை கையாண்டு, நாய்களின் தொந்தரவை கட்டுப்படுத்தியுள்ளனர்.

கேரளாவைச் சேர்ந்த ஸ்ட்ரீனி என்ற பெண், கே.டி.ஜே., நகரில் வசிக்கிறார். இவரது சொந்த ஊரிலும் தெருநாய்கள் தொல்லை இருந்தது. அப்போது, அவர் துணிகளுக்கு பயன்படுத்தும் சொட்டு நீலத்தை நீரில் கலந்து, பாட்டில்களில் நிரப்பி வீட்டு முன் வைத்தார். அதன்பின் அங்கு நாய்கள் எட்டி பார்க்கவில்லை.

நீல நிறம் என்றால், நாய்களுக்கு அலர்ஜி. எனவே, நீல நிற பாட்டில்களை கண்டு பயந்து ஓடின. இதே வழிமுறையை, இங்கும் ஸ்ட்ரீனி கையாண்டார். இது வெற்றி அடைந்து உள்ளது. இதைப் பார்த்து அப்பகுதியில் அனைவரும், பாட்டில்களில் சொட்டு நீலத்தை கலந்து வீட்டு வாசலில் வைத்துள்ளனர். நாய்களின் தொல்லையும் குறைந்துள்ளது.

அப்பகுதி மக்கள் சிலர் கூறுகையில், 'எங்கள் வீதியில் அனைவரின் வீட்டு முன்பாகவும், நீல நிற தண்ணீரை பாட்டில்களில் நிரப்பி வைத்துள்ளோம். நாய்கள் வருவதில்லை; நிம்மதியாக இருக்கிறோம். எங்களின் முயற்சி வெற்றி அடைந்துள்ளது' என்றனர்.

மக்களின் சாமர்த்தியம்

கால்நடை துறை அதிகாரி விஸ்வநாத் கூறுகையில், ''அடர்ந்த நீல நிறத்தை கண்டால், நாய்கள் அஞ்சும் என கேள்விப்பட்டிருக்கிறேன். நாயின் தொந்தரவை கட்டுப்படுத்த, வீட்டு முன் நீல நிற பாட்டில்கள் வைத்துள்ளனர். இது என் கவனத்துக்கும் வந்தது, நீல நிறத்தை கண்டு நாய்கள் பயந்திருக்க வேண்டும்.

''நீல நிறம் நாய்களின் கண்களை குத்துவது போன்றிருக்கும் என, மக்கள் கூறுகின்றனர். இது, அறிவியல் ரீதியில் நிரூபணமாகவில்லை. ஆயினும், மக்களின் சாமர்த்தியம் ஆச்சரியம் அளிக்கிறது,'' என்றார்.

Advertisement