உலக விளையாட்டு செய்திகள்

சபாஷ் சலா
லண்டன்: தொழில்முறை கால்பந்து வீரர்கள் சங்கம் (பி.எப்.ஏ.,) சார்பில், சிறந்த வீரருக்கான விருதை லிவர்பூர் அணியின் முகமது சலா (எகிப்து), 3வது முறையாக (2017-18, 21-22, 24-25) வென்றார். கடந்த பிரிமியர் லீக் சீசனில் (2024-25), 18 'அசிஸ்ட்', 29 கோல் அடித்த இவர், லிவர்பூல் அணி 20வது முறையாக கோப்பை வெல்ல உதவினார்.


மாட்ரிட் அபாரம்
மாட்ரிட்: ஸ்பெயினில் நடக்கும் 'லா லிகா' கோப்பை கால்பந்து தொடருக்கான லீக் போட்டியில் ரியல் மாட்ரிட், ஒசாசுனா அணிகள் மோதின. 'பெனால்டி' வாய்ப்பில் எம்பாப்வே (51வது நிமிடம்) கோல் அடிக்க, ரியல் மாட்ரிட் அணி 1-0 என வெற்றி பெற்றது.


ஜெர்மனி கலக்கல்
பிடெஸ்டி: ருமேனியாவில் நடக்கும் பெண்களுக்கான (16 வயது) 'யூரோ' கூடைப்பந்து 'ரவுண்டு-16' போட்டியில் ஜெர்மனி அணி 87-55 என, ருமேனியாவை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் பிரிட்டன் அணி 60-88 என, போலந்து அணியிடம் தோல்வியடைந்தது.


இத்தாலி அசத்தல்
ஓராடியா: ருமேனியாவில் நடக்கும் ஐரோப்பிய வாட்டர் போலோ சாம்பியன்ஷிப் (18 வயது) லீக் போட்டியில் கிரீஸ், இத்தாலி அணிகள் மோதின. இத்தாலி அணி 14-9 என வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் ஹங்கேரிய அணி 15-11 என நெதர்லாந்தை வென்றது.


எக்ஸ்டிராஸ்

* கோல்கட்டாவில் நடந்த துாரந்த் கோப்பை கால்பந்து அரையிறுதியில் டயமண்ட் ஹார்பர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தியது. பைனலில் (ஆக. 23, கோல்கட்டா) டயமண்ட் ஹார்பர், வடகிழக்கு யுனைடெட் அணிகள் மோதுகின்றன.


* இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, டயமண்ட் லீக் பைனலுக்கான (ஆக. 27-28, சுவிட்சர்லாந்து) இடத்தை ஏற்கனவே உறுதி செய்தார். இதனையடுத்து நாளை பெல்ஜியத்தில் நடக்கவுள்ள 14வது சுற்று டயமண்ட் லீக் போட்டியில் இருந்து விலகினார்.


* புரோ கபடி லீக் 12வது சீசனுக்கான குஜராத் அணியின் கேப்டனாக ஈரான் வீரர் முகமதுரேசா ஷாட்லுாயி நியமிக்கப்பட்டுள்ளார்.


* டில்லியில் நடந்த அனைத்து இந்திய சுதந்திர தின கோப்பை கராத்தே சாம்பியன்ஷிப் 19வது சீசனில் ஆதிக்கம் செலுத்திய மேகாலய நட்சத்திரங்கள், 10 தங்கம், 16 வெள்ளி, 15 வெண்கலம் என 41 பதக்கங்களை கைப்பற்றினர்.


* டில்லியில் நடக்கும் பெண்களுக்கான டில்லி பிரிமியர் லீக் தொடரின் லீக் போட்டியில் மத்திய டில்லி அணி (118/9, 19.5 ஓவர்) ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வடக்கு டில்லி அணியை (117/4, 20 ஓவர்) வீழ்த்தியது.

Advertisement