தேசிய சீனியர் தடகளம்: 700 வீரர்கள் உற்சாகம்

சென்னை, ஆக. 21-

சென்னையில் நேற்று துவங்கிய, தேசிய சீனியர் தடகளப் போட்டியில், 80 தமிழக வீரர்கள் உட்பட 700க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையர் பங்கேற்றுள்ளனர்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் எனும் எஸ்.டி.ஏ.டி., ஆதரவில், தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 64ம் ஆண்டு தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி, சென்னை பெரியமேடு, நேரு விளையாட்டு அரங்கில் நேற்று காலை துவங்கியது.

இதில், ஓட்டப்பந்தயம், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல் உள்ளிட்ட தடகளத்தில், பல்வேறு போட்டிகள் நடக்கின்றன. 35 அணிகளைச் சேர்ந்த, 700க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையர் பங்கேற்றுள்ளனர்.

தமிழக அணியில் பிரவீன் சித்ரவேல், வித்யா ராமராஜ், அபிநயா ராஜராஜன், டி.கே., விஷால், ஏஞ்சல் சில்வியா உட்பட 80 வீரர் - வீராங்க னையர் இடம் பெற்றுள்ளனர்.

முதல் நாள் போட்டியில், ஆண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டத்தில், உ.பி., வீரர் அபிஷேக், போட்டியின் துாரத்தை, 30:56.64 நிமிடங்களில் கடந்து முதலிடத்தை பிடித்தார். அவரை தொடர்ந்து, கர்நாடகாவின் சிவாஜி பராஷூ மடாப் 30:57.69 நிமிடங்களில் கடந்து இரண்டாமிடத்தை கைப்பற்றினார். போட்டிகள், 24ம் தேதி வரை நடக்கின்றன.

Advertisement