விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் விதிமுறை, கட்டுப்பாடு அறிவிப்பு

பெங்களூரு : பெங்களூரில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கான விதிமுறை, கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

பெங்., மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கு, உதவி நிர்வாக பொறியாளர் அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும். ரசாயனம், பிளாஸ்டர் ஆப் பாரிசில் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் தயாரிப்பது, விற்பனை செய்வோர் மீது வழக்கு பதிவு செய்யப்படும்; அபராதம் விதிக்கப்பட்டு, சிலைகள் பறிமுதல் செய்யப்படும்.

களி மண்ணால் செய்யப்பட்ட சிலைகள் செய்வதை ஊக்குவிக்க வேண்டும். இதற்காக, பிரசாரம் மேற்கொள்ளப்படும். பண்டிகை முடிந்த பின் தங்கள் வீட்டில் உள்ள சிலைகளை, வாளிகளில் தண்ணீர் நிரப்பி கரைக்கவும். ஏரிகள், குளங்களில் சிலைகள் கரைப்பதால் ஏற்படும் மாசுப்பாட்டை தவிர்க்க, தற்காலிக பிரம்மாண்ட தண்ணீர் தொட்டிகள் உருவாக்கப்படும். இங்கும் சிலைகள் கரைக்கப்படும்.

சிலை கரைக்கப்படும் இடங்களில் அடிப்படை வசதி, தேசிய பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு வீரர்கள், போலீஸ், மின் ஊழியர்கள் ஆகியோர் பணியில் இருப்பர். பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க சிறப்பு குழுக்கள், சிலை கரைப்பதை மேற்பார்வையிட சிறப்பு அதிகாரிகள் ஆகியோரும் உடனிருப்பர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement