சி.பி.எஸ்.இ., தென் மண்டல கைப்பந்து கவிபாரதி வித்யாலயா பள்ளி வெள்ளி

சென்னை, சி.பி.எஸ்.இ., தென்மண்டல அளவிலான ஹேண்ட்பால் எனும் கைப்பந்து போட்டியில், திருவொற்றியூர் கவிபாரதி வித்யாலயா பள்ளி, வெள்ளிப் பதக்கம் வென்றது.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் எனும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையிலான தென் மண்டல கைப்பந்து போட்டி, ஆந்திரா, ராஜமுந்திரியில் உள்ள ஸ்ரீ பிரகாஷ் வித்யா நிகேதன் பள்ளியில் நடந்தது.

போட்டியில், மூன்று மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்களில் இருந்து, 1,200க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர். இருபாலரிலும், 14, 17, 19 வயதுக்குட்பட்ட மூன்று பிரிவுகளில், தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில், 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில், சென்னை திருவொற்றியூர் கவிபாரதி வித்யாலயா பள்ளி மாணவர்கள் அணி பங்கேற்றது.

இந்த அணி, அரையிறுதி ஆட்டத்தில் 4 - 2 என்ற கணக்கில், ஆந்திராவின் பி.வி., பவன்ஸ் பள்ளியை தோற்கடித்து, இறுதி போட்டியில் திருச்சி ராஜாஜி வித்யாலயா பள்ளி அணியுடன் மோதியது. இதில், 3 - 4 என்ற கணக்கில், இரண்டாம் இடம் பிடித்த கவிபாரதி வித்யாலயா பள்ளி, வெள்ளி பதக்கத்தை வென்றது.

தென் மண்டல அளவில் வெள்ளிப் பதக்கம் வென்ற கவிபாரதி வித்யாலயா பள்ளி மாணவர்களை, பள்ளியின் தாளாளர் போஸ், முதல்வர் உமா மகேஸ்வரி, தலைமை ஆசிரியை காயத்ரி, உடற்கல்வி இயக்குநர் முருகன், உடற்கல்வி ஆசிரியர் மணிகண்டன் ஆகியோர், பள்ளியில் வைத்து நேற்று பாராட்டினர்.

Advertisement