மாநகராட்சி தீர்மானத்தை ரத்து செய்ய ஐகோர்ட்.. நிராகரிப்பு :. துாய்மை பணிகளை தனியாருக்கு வழங்க அனுமதி

சென்னை, சென்னையில் இரண்டு மண்டலங்களின் துாய்மை பணியை தனியாருக்கு வழங்கும் வகையில் மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை, சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்து விட்டது. '
நகரத்தை சுத்தமாக வைத்திருக்கும் வகையில் அரசு எடுத்த முடிவிலும், மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்திலும் எந்தவொரு சட்ட விதிமீறலும் இல்லை; அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானதும் அல்ல' என, நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.
சென்னை மாநகராட்சியில் ராயபுரம், திரு.வி.க., நகர் ஆகிய மண்டலங்களில், துாய்மை பணிகளை தனியார் நிறுவனத்துக்கு வழங்கி, ஜூன் 16ல், மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
துாய்மை பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், அம்பத்துாரைச் சேர்ந்த, 'உழைப்போர் உரிமை இயக்கம்' சார்பில், அதன் தலைவர் கு.பாரதி வழக்கு தொடர்ந்தார்.
மனு விபரம்:
மாநகராட்சியில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில், ஏற்கனவே ஏழு மண்டலங்களின் துாய்மை பணி, தனியாருக்கு மாற்றப்பட்டு உள்ளது.
தற்போது, ராயபுரம், திரு.வி.க.நகர் ஆகிய மண்டலங்களில் துாய்மை பணி தனியாருக்கு மாற்றப்படுகிறது. இங்கு பணிபுரிந்து வரும் 2,042 நிரந்தர பணியாளர்கள், வேறு மண்டலங்களுக்கு மாற்றப்படுவர்.
தற்காலிக பணியாளர்கள் 1,953 பேர், ஒப்பந்த பணியில் சேர்க்கப்படுவர் என்றாலும், அவர்கள் பணி நீக்கம் செய்ய வாய்ப்புள்ளது.
அதனா், துாய்மை பணிகளை தனியாருக்கு வழங்கி, ஜூன் 16ல் நிறைவேற்றப்பட்ட மாநகராட்சியின் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதி கே.சுரேந்தர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சங்கம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.குமாரசாமி வாதிட்டதாவது:
துாய்மை பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிர்த்து, தொழிலாளர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே, துாய்மை பணிகளை தனியாருக்கு வழங்க முடியாது. அதற்கு தொழிலாளர் நீதிமன்றத்தின் அனுமதியை பெற வேண்டும்.
தினக்கூலி 793 ரூபாய். தனியாரிடம் ஒப்படைத்தால், கூலி குறைய வாய்ப்புள்ளது. மாநகராட்சி நடவடிக்கையால், 2,000க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்களின் வேலை பறிபோகும். கடந்த 15 ஆண்டுகளாக பணிபுரிந்தவர்களை, குப்பைகளை போல துாக்கி எறியக்கூடாது.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
மாநகராட்சி தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், வழக்கறிஞர் ரமேஷ் ஆகியோர் வாதிட்டதாவது:
துாய்மை பணியாளர்களை வீசி எறிய போவதில்லை. பணியில் இருந்தும் வெளியேற்றப்பட மாட்டார்கள். ஒப்பந்ததாரர் வாயிலாகவே பணி வழங்கப்படும்.
ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும், 2,000 துாய்மை பணியாளர்களுக்கும், அதிக ஊதியத்துடன், வருங்கால வைப்பு நிதி, இன்சூரன்ஸ் உள்ளிட்ட சலுகைகளுடன் வேலையை, ஒப்பந்த நிறுவனம் வழங்கும்.
இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.
ஒப்பந்த நிறுவனம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய்நாராயணன், வழக்கறிஞர் ஆர்.முத்துகிருஷ்ணன் ஆஜராகி, 'துாய்மை பணிகளை தனியாருக்கு வழங்குவது அரசின் கொள்கை முடிவு. இந்த முடிவில் விதிமீறல் இருந்தால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும்.
'இதுவரை பணிக்கு வந்த 341 பேருக்கு பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டு உள்ளன. மேலும், 1,900 பணியாளர்கள் தேவை என்ற நிலையில், பணிக்கு சேர்வதற்கான கால அவகாசத்தை ஆக., 31 வரை நீட்டிக்க தயார்' என்றனர்.
அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, இந்த மனு மீதான உத்தரவை தள்ளி வைத்திருந்தார்.
இந்த வழக்கில் நேற்று, நீதிபதி கே.சுரேந்தர் பிறப்பித்த உத்தரவு:
பொதுமக்கள் மற்றும் நிர்வாகத்தின் நலன்களுக்காக, மாநில அரசுக்கு கொள்கை முடிவுகளை எடுக்க சுதந்திரம் உள்ளது. இருப்பினும், அரசின் முடிவுகள் அரசியலமைப்பு மற்றும் ஏற்கனவே உள்ள சட்டங்களை மீறுவதாக இருக்கக்கூடாது.
இதை உறுதி செய்வது மட்டுமின்றி, அரசின் முடிவுகளால் எந்தவொரு பிரிவு மக்களும் கடுமையாக பாதிக்கப்படாமல் பார்த்து கொள்வதும் அரசின் கடமை.
சென்னை மாநகராட்சி, ஒப்பந்ததாரர் நிறுவனத்துடன் கலந்துபேசி, துாய்மை பணியாளர்கள் கடைசியாக பெற்ற ஊதியத்தை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
மாநகராட்சியில் உள்ள மண்டலங்களின் சுகாதார பணிகளை தனியார்மயமாக்குவது என்பது, சுகாதார நிலைமைகளை மேம்படுத்துவதற்கும், கழிவு மேலாண்மைக்கும், முன்னெடுக்கப்பட்ட கொள்கை முடிவாகும்.
தற்போதைய சூழ்நிலையில், நகரத்தை சுத்தமாக வைத்திருப்பதற்காக, திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுகாதாரப் பணிகளை தனியார்மயமாக்க, அரசு முடிவு செய்துள்ளது.
அதற்காக, மாநகராட்சியால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், எந்தவொரு சட்ட விதியையும் மீறவில்லை; அரசியலமைப்பிற்கு விரோதமானதும் அல்ல என்பதால், அத்தகைய தீர்மானத்தை ரத்து செய்யும் கேள்வி எழுவதில்லை.
துாய்மை பணியாளர்கள் தனியார் நிறுவனத்தில் பணியில் சேர ஒப்பு கொண்டாலும், தற்போதுள்ள சட்டங்களின்படி, தங்களின் உரிமைகளுக்காக போராடுவதற்கு சுதந்திரம் உள்ளது. மேலும், துாய்மை பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர் என்ற நிலை எழவில்லை.
எனவே, சென்னை மாநகராட்சியின் இரண்டு மண்டலங்களில் துாய்மை பணிகளை தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய அவசியம் எழவில்லை. மனு முடித்து வைக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்படுகிறது.
மேலும்
-
வீடு புகுந்து நாய் கடித்ததில் குழந்தை, பாட்டி படுகாயம்
-
'டி.ஜி.பி., பதவியில் சாதகமானவரை நியமிக்க தி.மு.க., அரசு முயற்சி': பழனிசாமி
-
மகளிர் உரிமை தொகை ரூ.1,500; தீபாவளிக்கு சேலை, பொங்கலுக்கு ரூ.2,500 வாக்குறுதிகளை அள்ளி வீசும் பழனிசாமி
-
தி.மு.க., பற்றி அடக்கிவாசிப்பு; முதல்வர் சந்திப்புக்கு பின் சீமான் பேச்சில் மாற்றம்
-
கூட்டணி தலைவர்களுக்கு முதல்வர் வீட்டில் விருந்து; தொகுதி குறைப்பு, புதிய கட்சிகள் வருகை குறித்து பேச்சு
-
ம.தி.மு.க.,வில் மல்லை சத்யா சஸ்பெண்ட்; செப்., 15ல் புதிய கட்சி துவங்க திட்டம்