ஷ்ரேயஸ் புறக்கணிப்பு சரியா * ஆசிய கோப்பை அணியில்...

புதுடில்லி: ஆசிய கோப்பை இந்திய அணியில் ஷ்ரேயஸ் சேர்க்கப்படாததற்கு, பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்துள்ளன.
இந்திய அணி வீரர் ஷ்ரேயஸ் ஐயர் 30. இதுவரை 14 டெஸ்ட் (811 ரன்), 70 ஒருநாள் (2845), 51 'டி-20'ல் (1104) பங்கேற்றுள்ளார். கடந்த 2024ல் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க மறுத்தார். இதனால் ஷ்ரேயஸ், இளம் வீரர் இஷான் கிஷான் என இருவரையும், சம்பள ஒப்பந்த பட்டியலில் இருந்து இந்திய கிரிக்கெட் போர்டு நீக்கியது. பின் ரஞ்சி கோப்பை (480 ரன்), சையது முஷ்தாக் 'டி-20' (345) தொடரில் களமிறங்கிய ஷ்ரேயஸ், ரன் மழை பொழிய, மும்பை அணி கோப்பை வென்றது. விஜய் ஹசாரே டிராபியில் 325 ரன் குவித்தார். இதையடுத்து, சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 'நாயகனாக' (243 ரன்) ஜொலித்தார். இந்தியா சாம்பியன் ஆனது. இதனால், மீண்டும் சம்பள ஒப்பந்த பட்டியலில் சேர்க்கப்பட்டார்.
தவிர, 2025 ஐ.பி.எல்., தொடரில் 604 ரன் குவித்து, பஞ்சாப்பை பைனலுக்கு அழைத்துச் சென்றார். இருப்பினும், ரோகித், கோலி ஓய்வு பெற்ற நிலையில் டெஸ்ட் அணியில் சேர்க்கப்படுவார் என நம்பப்பட்டது. மாறாக இங்கிலாந்து தொடரில் இடம் கிடைக்கவில்லை. தற்போது
தற்போது, ஆசிய கோப்பை 'டி-20' தொடருக்கான அணியிலும் புறக்கணிக்கப்பட்டார். இதுகுறித்து தேர்வுக்குழு தலைவர் அகார்கர் கூறுகையில்,''ஷ்ரேயஸ் தனது வாய்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும்,'' என்றார்.
இதற்கு இந்திய அணி முன்னாள் வீரர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
* ராபின் உத்தப்பா
'டி-20' உலக கோப்பை தொடருக்கு முன் இந்திய அணி 18 போட்டிகளில் பங்கேற்கலாம். ஆனால் சாம்பியன்ஸ் டிராபி வென்று தந்த ஷ்ரேயஸ், 'டி-20' அணியில் இல்லாதது விசித்திரமாக உள்ளது. இதுகுறித்து தேர்வுக்குழுவினர் அவரிடம் பேசியிருப்பர் என நம்புகிறேன். விரைவில் அணியில் இடம் கிடைக்கும் என நம்பலாம். இதற்கான தகுதி அவருக்கு உள்ளது.
* ஆகாஷ் சோப்ரா
ஷ்ரேயஸ் தேர்வு செய்யப்படாதது பெரிய கதை. ஐ.பி.எல்., தொடரில் 604 ரன் விளாசினார். ரஞ்சி கோப்பை, சையது முஷ்தாக், சாம்பியன்ஸ் டிராபியில் அசத்தினார். ஒரு மனிதராக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து விட்டார். இதற்கும் மேல் என்ன வேண்டும்.
ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டால், உலக கோப்பை 'டி-20' அணியில் இடம் பிடிக்கலாம் என நம்புகிறேன்.
* அபிஷேக் நாயர்
15 பேர் கொண்ட அணியை விட, 'ரிசர்வ்' வீரர்கள் சேர்த்து 20 பேர் தேர்வு செய்தனர். இதில் ரியான் பராக்கிற்கு கூட இடம் கிடைக்கிறது. ஆனால் ஸ்ரேயஸ் சேர்க்கப்படவில்லை. உண்மையில் இவர் சிறந்த வீரரா, இல்லையா என தேர்வுக்குழு தலைவர் அகார்கர் தெரிவிக்க வேண்டும்.

Advertisement