அரசின் புதிய விதிமுறைகளால் சிறு உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பு எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் கவலை

புதுடில்லி:சமையல் எண்ணெய்க்கான புதிய விதிமுறைகள், சிறிய உற்பத்தியாளர்களை மிகவும் பாதிக்கும் என, எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

'சமையல் எண்ணெய் உற்பத்தி மற்றும் இருப்பு (ஒழுங்கு முறை) சட்டத் திருத்த உத்தரவு 2025'ஐ மத்திய அரசு இம்மாத துவக்கத்தில் அறிமுகப் படுத்தியது.

இதற்கு முந்தைய 2011 உத்தரவில் இருந்த முக்கிய சட்டப் பிரிவுகளை மாற்றியதோடு, 'புள்ளியியல் சேகரிப்பு சட்டம் 2008' உடன் இணைத்தது.

இதன் வாயிலாக, வெளிப்படை தன்மை மற்றும் சேகரிக்கப்படும் தரவுகளின் துல்லியத்தை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை நிறுவனங்களும், உற்பத்தியாளர்களும் உடனடியாக கடைப்பிடிக்கவும் உத்தரவிடப் பட்டுள்ளது.

இது குறித்து, எண்ணெய் உற்பத்தியாளர் சங்க தலைவர் சஞ்சீவ் அஸ்தானா தெரிவித்துள்ளதாவது:

புதிய உத்தரவின்படி இணையத்தில் பதிவு செய்வதும், மாதந்தோறும் எண்ணெய் பயன்பாடு, உற்பத்தி குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டியதும் கட்டாயமாகிறது.

பெரிய நிறுவனங்கள் உடனடியாக இதற்கு இணக்கம் தெரிவித்தாலும், டிஜிட்டல் பயன்பாடு இல்லாத ஆயிரக்கணக்கான சிறிய உற்பத்தியாளர்கள் இதை கடைப்பிடிப்பதில் சிரமத்தை எதிர்கொள்வர்.

அனைத்து உற்பத்தி யாளர்களையும் அரசு கண்டறிவதே மிகப்பெரிய விஷயம். அனைவரையும் ஒன்று சேர்க்கவில்லை என்றால், கடுமையான விதிமுறைகள் இருந்தும் இதை கடைப்பிடிப்பதில் உள்ள குறைபாடுகளால், திட்டமிட்ட இலக்கை எட்ட முடியாது.

குழப்பத்தை தவிர்க்கவும், சந்தை பாதிக்கப்படாமல் இருக்கவும், புதிய நடைமுறைக்கு மாறுவதற்கு அரசு கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உற்பத்தியில் வெளிப்படை தன்மை, தரவுகளில் துல்லியம் ஆகியவற்றை மேம்படுத்த, அரசு புதிய விதிகளை அறிமுகம் செய்தது

Advertisement