ரஷ்ய அதிபர் புடினுடன் ஜெய்சங்கர் ஆலோசனை

புதுடில்லி: ரஷ்யா சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு அதிபர் புடினை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா வரி விதித்துள்ளது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவிக்க, இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இச்சூழ்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ரஷ்யா சென்றுள்ளார். இன்று அவர் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ராவை சந்தித்து பேசினார்.
அதன் பிறகு இருவரும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்
அப்போது ஜெய்சங்கர் கூறுகையில், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கவில்லை. சீனா தான் வாங்குகிறது. அதேபோல், இயற்கை எரிவாயுவை ஐரோப்பிய நாடுகள் தான் வாங்குகின்றன. இந்தியா வாங்கவில்லை.
2022ம் ஆண்டுக்கு பிறகு, ரஷ்யாவிடம் மிகப்பெரிய வர்த்தக ஏற்றத்தை கொண்ட நாடு இந்தியா அல்ல. தெற்கில் சில நாடுகள் உள்ளன. உலக எரிசக்தி சந்தையை சமப்படுத்த, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவது உள்ளிட்ட அனைத்தையும் செய்ய வேண்டும் என அமெரிக்கர்கள் கடந்த சில ஆண்டாக சொல்லி வந்தனர். அமெரிக்காவில் இருந்தும் கச்சா எண்ணெய் வாங்குகிறோம். அந்த அளவு அதிகரித்துள்ளது எனக்கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, ரஷ்ய அதிபர் புடினையும் சந்தித்த ஜெய்சங்கர், இரு நாட்டு உறவு, வர்த்தகம், அமெரிக்க வரி விதிப்பு குறித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
