உலக பாட்மின்டன்: சாதிப்பாரா சிந்து

பாரிஸ்: உலக பாட்மின்டனில் இந்தியாவின் சிந்து, லக்சயா சென் சாதிக்க காத்திருக்கின்றனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில், உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் இன்று துவங்குகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென், பிரனாய்க்கு சவால் காத்திருக்கிறது.

கடந்த 2021ல் வெண்கலம் வென்ற லக்சயா சென், முதல் சுற்றில் உலகின் 'நம்பர்--1' சீனாவின் ஷி யூ கியை எதிர்கொள்கிறார். சீன வீரருக்கு எதிராக விளையாடிய 4 போட்டியில், ஒன்றில் மட்டும் லக்சயா வெற்றி பெற்றுள்ளார்.

முதல் சுற்றில் பின்லாந்தின் ஜோகிம்மை சந்திக்கும் பிரனாய், 2வது சுற்றில் உலகின் 'நம்பர்-2' டென்மார்க்கின் ஆன்டர்ஸ் ஆண்டர்சனை எதிர்கொள்ள நேரிடும். ஆண்டர்சனுக்கு எதிராக கடைசியாக விளையாடிய 2 போட்டியிலும் தோல்வியடைந்திருப்பதால் பிரனாய்க்கும் சவால் காத்திருக்கிறது.

கடந்த 2019ல் உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் சிந்து, நடப்பு சீசனில் பெரிய அளவில் சாதிக்கவில்லை. இந்திய ஓபனில் காலிறுதி வரை சென்றிருந்தார். சீன ஓபனில், சகவீராங்கனை உன்னதி ஹூடாவிடம் தோல்வியடைந்தார். இம்முறை எழுச்சி கண்டால், உலக சாம்பியன்ஷிப்பில் தனது 6வது பதக்கத்தை கைப்பற்றலாம்.
ஆண்கள் இரட்டையரில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடிக்கு முதல் சுற்றில் 'பை' வழங்கப்பட்டுள்ளது. கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா ஜோடிக்கு 'பை' வழங்கப்பட்டுள்ளது.

Advertisement