ஹெட், மார்ஷ், கிரீன் சதம் விளாசல்: ஆஸ்திரேலிய அணி இமாலய வெற்றி

மக்காய்: மூன்றாவது ஒருநாள் போட்டியில் டிராவிஸ் ஹெட், மிட்சல் மார்ஷ், கேமரான் கிரீன் என மூவர் சதம் விளாச, ஆஸ்திரேலிய அணி 276 ரன் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றது.


ஆஸ்திரேலியா சென்ற தென் ஆப்ரிக்க அணி, ஒருநாள் தொடரில் பங்கேற்றது. மூன்றாவது போட்டி மக்காய் நகரில் நடந்தது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மிட்சல் மார்ஷ், 'பேட்டிங்' தேர்வு செய்தார்.
வலுவான துவக்கம்: ஆஸ்திரேலிய அணிக்கு ஹெட், மார்ஷ் அதிரடி துவக்கம் தந்தனர். இருவரும் பவுண்டரி, சிக்சர்களாக விளாசினர். ரபாடா (கணுக்கால் காயம்), லுங்கிடி (ரெஸ்ட்) இல்லாத நிலையில், தென் ஆப்ரிக்க பந்துவீச்சு எடுபடவில்லை. ஒருநாள் அரங்கில் ஹெட், தனது 7வது சதத்தை எட்டினார். முதல் விக்கெட்டுக்கு 250 ரன் சேர்த்த நிலையில், மஹாராஜ் 'சுழலில்' ஹெட் (142, 17x4, 5x6) சிக்கினார். மறுபக்கம் சதம் அடித்த கையோடு மார்ஷ் (100, 6x4, 5x6) அவுட்டானார்.


கிரீன் 'சரவெடி': முன்னதாக களமிறக்கப்பட்ட கேமரான் கிரீன் வெளுத்து வாங்கினார். தமிழக வம்சாவளி 'ஸ்பின்னர்' செனுரான் முத்துசாமி ஓவரில் 'ஹாட்ரிக்' சிக்சர் அடித்தார். கிரீன், 47 பந்தில் ஒருநாள் போட்டிகளில் தனது முதல் சதம் அடித்தார். கடைசி 10 ஓவரில் 126 ரன் எடுக்கப்பட்டன. ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 431/2 ரன் குவித்தது. கிரீன் (118, 6x4, 8x6), கேரி (50) அவுட்டாகாமல் இருந்தனர்.


கோப்பை வசமானது: கடின இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு மார்க்ரம் (2), ரிக்கிள்டன் (11), கேப்டன் பவுமா (19) ஏமாற்றினர். ஜோர்ஜி (33), பிரவிஸ் (49), கார்பின் (17) உள்ளிட்டோர் கூப்பர் கொனாலி 'சுழலில்' நடையை கட்டினர். தென் ஆப்ரிக்க அணி 24.5 ஓவரில் 155 ரன்னுக்கு சுருண்டு தோல்வி அடைந்தது. இருப்பினும் முதல் இரு போட்டிகளில் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்கா, தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பை வென்றது.
ஆட்டநாயகன் விருதை டிராவிஸ் ஹெட் (142 ரன்) வென்றார்.


'மெகா' வெற்றி

ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, தனது இரண்டாவது சிறந்த வெற்றியை (276 ரன்) பதிவு செய்தது. முதலிடத்தில் 309 ரன்னில் வென்றது (எதிர், நெதர்லாந்து, 2023, டில்லி) நீடிக்கிறது.


* தென் ஆப்ரிக்க அணி ஒருநாள் போட்டிகளில் தனது மோசமான தோல்வியை (276 ரன்) பெற்றது. இதற்கு முன் 243 ரன்னில் (எதிர், இந்தியா, 2023, கோல்கட்டா) தோற்று இருந்தது.

* ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடர்ந்து 5வது ஒருநாள் தொடரை தென் ஆப்ரிக்கா
கைப்பற்றியது.

431/2 ரன்
ஒருநாள் அரங்கில் ஆஸ்திரேலிய அணி நேற்று தனது இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை (431/2) பதிவு செய்தது. முதலிடத்தில் 434/4 ரன் (எதிர், தெ.ஆ., 2006, ஜோபெர்க்) நீடிக்கிறது.


* இது, ஒருநாள் போட்டி வரலாற்றில் 9வது அதிகபட்ச ஸ்கோர். இப்பட்டியலில் இங்கிலாந்து (498/4, எதிர், நெதர்லாந்து, 2022) முதலிடத்தில் உள்ளது.
47 பந்தில்


ஒருநாள் போட்டியில் அதிவேக சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர்களில் கிரீன் (நேற்று 47 பந்து) 2வது இடம் பிடித்தார். முதலிடத்தில் மேக்ஸ்வெல் (40 பந்து, எதிர், நெதர்லாந்து, 2023, டில்லி) உள்ளார்.

சூப்பர் ஜோடி
ஒருநாள் போட்டியில் 250+ ரன் சேர்த்த ஆஸ்திரேலிய துவக்க ஜோடி வரிசையில் ஹெட்-மார்ஷ் (250 ரன்) 5வது இடம் பிடித்தனர். முதலிடத்தில் ஹெட்-வார்னர் (284 ரன், எதிர், பாக்., 2017, அடிலெய்டு) உள்ளனர்.


'டாப்-3' அபாரம்
ஆஸ்திரேலிய அணியின் 'டாப்-3' பேட்டர்கள் நேற்று சதம் அடித்தனர். இது, ஒருநாள் அரங்கில் இரண்டாவது முறை. இதற்கு முன் தென் ஆப்ரிக்க அணி (ஆம்லா-153, ரோசாவ்-128, டிவிலியர்ஸ்-149 எதிர், வெ.இ., 2015) சாதித்திருந்தது.


* ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா சார்பில் முதல் முறையாக 3 பேட்டர்கள் சதம் அடித்தனர். ஒட்டுமொத்தமாக 5வது முறை. இதற்கு முன் தென் ஆப்ரிக்கா 3, இங்கிலாந்து ஒரு முறை இப்படி சாதித்தன.

5 விக்கெட்


நேற்று அசத்திய கூப்பர் கொனாலி (22 ஆண்டு 2 நாள்), ஆஸ்திரேலியா சார்பில் 5/22 விக்கெட் வீழ்த்திய இளம் பவுலரானார். கிரெக் மெக்டர்மட் (22 ஆண்டு, 204 நாள், 5/44, எதிர், பாக்., 1987) சாதனையை தகர்த்தார்.
* ஒருநாள் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய ஆஸ்திரேலிய 'ஸ்பின்னர்' ஆனார் கூப்பர் கொனாலி (5/22). பிராட் ஹாக் (5/32, எதிர், வெ.இ., 2005) சாதனையை முறியடித்தார்.

Advertisement