உலக விளையாட்டு செய்திகள்

செரினாவுக்கு கவுரவம்
நியூபோர்ட்: டென்னிஸ் போட்டியில் சாதித்தவர்களுக்கான சர்வதேச 'ஹால் ஆப் பேம்' பட்டியலில் அமெரிக்க வீராங்கனை செரினா வில்லியம்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். கிராண்ட்ஸ்லாம் ஒற்றையரில் 23 பட்டம் வென்றுள்ள இவர், ஒலிம்பிக்கில் 4 தங்கம் (ஒரு ஒற்றையர், 3 இரட்டையர்) கைப்பற்றினார். தவிர இவர், டபிள்யு.டி.ஏ., ஒற்றையர் தரவரிசையில் 319 வாரம் 'நம்பர்-1' இடத்தில் இருந்தார்.


ஸ்காட்லாந்து கலக்கல்
லண்டன்: இங்கிலாந்தில் நடக்கும் பெண்கள் உலக கோப்பை ரக்பி தொடருக்கான லீக் போட்டியில் ஸ்காட்லாந்து அணி 38-8 என, வேல்சை வீழ்த்தியது. பிரான்ஸ் அணி 24-0 என, இத்தாலியை வென்றது. இங்கிலாந்து அணி 69-7 என அமெரிக்காவை வென்றது.


சீனா 'ஹாட்ரிக்'
ஜியாங்மென்: சீனாவில் நடக்கும் உலக வாலிபால் சாம்பியன்ஷிப் (21 வயது) லீக் போட்டியில் சீன அணி 3-0 என (25-18, 25-17, 25-19) என, தாய்லாந்தை தோற்கடித்தது. ஏற்கனவே துருக்கி, மொராக்கோவை வீழ்த்திய சீன அணி, 'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது.


இன்டர் மயாமி 'டிரா'
வாஷிங்டன்: அமெரிக்காவில் நடக்கும் மேஜர் லீக் கால்பந்து (எம்.எல்.எஸ்.,) போட்டியில் இன்டர் மயாமி, டி.சி., யுனைடெட் அணிகள் மோதின. இப்போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது. மற்றொரு போட்டியில் நியூயார்க் சிட்டி அணி 1-0 என, சின்சினாட்டியை வீழ்த்தியது.


எக்ஸ்டிராஸ்

* தென் ஆப்ரிக்காவில் வரும் டிச. 26ல் துவங்கும் 'எஸ்.ஏ.20' லீக் 4வது சீசனுக்கான பிரிட்டோரியா அணியின் தலைமை பயிற்சியாளராக, முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டார்.

* ஆமதாபாத்தில், காமன்வெல்த் பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப் இன்று துவங்குகிறது. இதில் காயத்தில் இருந்து மீண்ட இந்திய வீராங்கனை மீராபாய் சானு பங்கேற்கிறார். இந்தியா சார்பில் பிந்தியாராணி தேவி, வன்ஷிதா, லவ்பிரீத் சிங் உள்ளிட்டோர் விளையாடுகின்றனர்.

Advertisement