அரசியல் ஆதாயத்துக்காக அவையை செயல்பட விடாத எதிர்க்கட்சிகள்: அமித் ஷா குற்றச்சாட்டு

11

புதுடில்லி: பார்லிமெண்ட், சட்டசபைகளை குறுகிய அரசியல் ஆதாயத்துக்காக எதிர்க்கட்சிகள் செயல்பட விடாமல் இருப்பது நல்லதல்ல என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி உள்ளார்.



பார்லிமெண்ட் கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகளின் இடையூறுகளால் பல முறை ஒத்தி வைக்கப்பட்டது. தொடர் போராட்டங்கள் மற்றும் குறுக்கீடுகள் காரணமாக அலுவல் பணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டது.


இந் நிலையில், அகில இந்திய சபாநாயகர்கள் 2 நாள் மாநாட்டை உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று( ஆக.24) தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது;


பார்லிமெண்ட், சட்டசபைகளை குறுகிய அரசியல் ஆதாயத்துக்காக எதிர்க்கட்சிகள் செயல்பட விடாமல் செய்கிறது. பார்லிமெண்டில் குறைந்த அளவிலான விவாதங்கள் நடப்பது, தேசத்தை கட்டியெழுப்புவதை பாதிக்கும். ஜனநாயகத்தில் விவாதங்கள் நடைபெற வேண்டும்.


ஆனால், ஒருவரின் குறுகிய அரசியல் ஆதாயத்துக்காக எதிர்க்கட்சி என்ற பெயரில் அவைகளை செயல்பட அனுமதிக்காவிட்டால் அது நல்லதல்ல. நாடு அதை பற்றி சிந்திக்க வேண்டும்.


எதிர்ப்பு எப்போதும் கட்டுப்படுத்தப்பட வேண்டும். மக்களும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் அதை சிந்திக்க வேண்டும். பார்லி.யில் அனைத்து விவாதங்களும் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். அந்தந்த சபைகளின் விதிகள் படி சபை நடக்கிறதா என்பதை நாம் உறுதி செய்து கொள்ள வேண்டும். வரலாற்று ரீதியாக கண்ணியத்தை இழந்த சபைகள் மோசமான விளைவுகளை சந்தித்தன.


வாதங்கள் பாரபட்சம் அல்லாதவையாக இருக்க வேண்டும். விதிகள் படி அவையின் செயல்படுகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய வேண்டும். சுதந்திரம் பெற்றதில் இருந்து இங்கு ஜனநாயகம் ஆழமாக வேரூன்றி இருக்கிறது.


ஆட்சி மாற்றங்களின் போது ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தப்படவில்லை. நாட்டின் சுதந்திர போராட்டம் முக்கியமானது என்றால், சட்டமன்ற நடைமுறைகளை மதிப்பது முக்கியம். சபாநாயகர் பதவியின் கண்ணியம், மரியாதை ஆகியவற்றை அதிகரிக்க நாம் அனைவரும் பாடுபட இது ஒரு வாய்ப்பு.


இவ்வாறு உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.

Advertisement