பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்றார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி: விரைவில் இந்தியா வருகை

10

புதுடில்லி; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்தியா வர பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளதாக இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் அலெக்சாண்டர் போலிஷ்சுக் தெரிவித்துள்ளார்.



உக்ரைன்-ரஷ்யா நாடுகள் இடையேயான போர் 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து முயன்று வருகிறார்.


அண்மையில் ரஷ்ய அதிபர் புடின், பிரதமர் மோடி இருவரும் தொலைபேசி மூலம் போர் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். தூதரக ரீதியில் அமைதி வழியில் போருக்கு தீர்வு காணவேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.


இந் நிலையில் இந்தியா வருமாறு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து உக்ரைன் தூதர் அலெக்சாண்டர் போலிஷ்சுக் கூறியதாவது;


உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விரைவில் இந்தியா வருகிறார். அவரின் பயண தேதி உள்ளிட்ட விவரங்கள் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் அவர் பிரதமர் மோடியை சந்திப்பார்.


அப்போது ரஷ்ய உடனான போர், அதன் நிலவரம் குறித்து இருவரும் ஆலோசிக்க உள்ளனர். அவரின்(ஜெலன்ஸ்கி) பயணம் இருநாடுகள் இடையேயான உறவை வலுப்படுத்தும்.


ரஷ்யா போரின் முதல் நாளில் இருந்தே நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இந்தியா அமைதியை விரும்புகிறது என்று பிரதமர் மோடி ஏற்கனவே தெரிவித்துள்ளார். உக்ரைனில் அமைதியை கட்டியெழுப்புவதில் இந்தியாவின் ஈடுபாடு அதிகமாக இருக்கும்.


இவ்வாறு போலிஷ்சுக் கூறினார்.

Advertisement