20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம்: திரும்பப் பெற வெண்டும் என்கிறார் சீமான்

2

சென்னை:ராமநாதபுரத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனைக் கிணறுகள் அமைக்க கொடுத்த அனுமதியை,தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை:

ராமநாதபுரத்தின் தனிச்சியம், பேய்குளம், கீழசெல்வனூர், கே.வேலங்குப்பம், காவனூர், காமன்கோட்டை, சிறுவயல், ஏ.மணக்குடி, சீனங்குடி, அழகர்தேவன்கோட்டை உள்ளிட்ட 20 இடங்களில் எண்ணெய்க் கிணறுகள் அமைப்பதற்கு மத்திய அரசின் எண்ணெய் மற்றும் எரிவாயுக் கழகம் முன்மொழிந்த நிலையில் அதற்கான சூழலியல் அனுமதியை மாநில அளவிலான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் வழங்கியிருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டம், அதன் தனித்துவமான சுற்றுச்சூழல் மற்றும் வேளாண் பொருளாதாரத்தைப் பாதுகாக்க வேண்டிய ஒரு பகுதியாக இருக்கும் நிலையில், இந்த திட்டத்தினை முன்னெடுப்பது மிகவும் ஆபத்தானது.

இந்தியாவில் இருக்கக்கூடிய ஒரே கடல்சார் உயிர்கோளக் காப்பகம் மன்னார் வளைகுடாவாகும். இது அரிய மற்றும் அழியும் நிலையிலுள்ள உயிரினங்களை, குறிப்பாக பவளப் பாறைகள், மீன்கள், கடல் மிருகங்கள் மற்றும் பல்வேறு கடல் உயிரினங்களைக் கொண்டுள்ளது. திட்டமிடப்பட்டக் கிணறு தோண்டும் இடங்களுக்கு அருகில் உள்ள இந்தப் பகுதி மிகவும் பாதிக்கப்படக்கூடியது. இந்த செயல்பாடுகள், கடல் சுற்றுச்சூழலை சீர்குலைக்கும். மேலும் இத்திட்டம், கிணறு தோண்டும் இடங்கள், குழாய்கள் மற்றும் செயலாக்க ஆலைகளுக்குப் பெரும் நிலப்பரப்பு தேவைப்படுத்துகிறது. இது கடற்கரையோர வாழ்விடங்களை அழித்து, உள்ளூர் தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதிக்கும்.

மாநில அளவிலான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் முழு அதிகாரம் மாநில அரசிடம் இல்லை என தமிழக அரசு கூறுமானால் அதனை மாற்றி அமைக்கும் முன்னெடுப்புகளையும் தமிழக அரசு செய்யவில்லையா? மேலும் இவற்றை நிறுவக்கூடிய விதிகளான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை 2006ஐ உருவாக்கியபோது ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சராக திமுகவை சேர்ந்த ஆ.ராசா அவர்கள் இருந்த நிலையிலும் இதனைக் கருத்திற்கொள்ளவில்லையா எனும் கேள்வியும் எழுகிறது.

இனியும் மக்களை வெற்றுச் சொற்கள் கொண்டு ஏமாற்றாமல், அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளைக் காப்பாற்றத் திமுக அரசு முன்வர வேண்டும். இத்திட்டத்திற்கான சூழலியல் அனுமதியை திரும்பப்பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும், இத்திட்ட முன்மொழிவை திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய பாஜ அரசை வலியுறுத்துகிறேன். தவறும் பட்சத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மக்களை திரட்டி பெரும் போராட்டங்களை முன்னெடுப்போம் என்று பேரறிவிப்பு செய்கிறேன்.

இவ்வாறு சீமான் அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement