புதிதாக வாங்கிய காரில் தொழில்நுட்ப பிரச்னை நடிகர்கள் ஷாருக், தீபிகா படுகோன் மீது வழக்கு

1

பரத்பூர்: ராஜஸ்தானில் 'ஹுண்டாய்' நிறுவன கார் வாங்கிய ஒருவர், அதில் தொடர் கோளாறு ஏற்பட்ட காரணத்தால், அந்நிறுவனம் மற்றும் அதன் விளம்பரத்தில் இடம்பெற்ற நடிகர் ஷாருக் கான், நடிகை தீபிகா படுகோன் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

ராஜஸ்தானின் பரத்பூரின் அனிருத் நகரில் வசிக்கும் கீர்த்தி சிங், 50, என்பவர் கார் வாங்க திட்டமிட்டார்; பலரிடம் யோசனை கேட்டவர், 'டிவி' விளம்பரங்களையும் விடாமல் பார்த்து வந்தார். அதன் அடிப்படையில், 24 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 'ஹுண்டாய் அல்கஸார்' காரை 2022ம் ஆண்டு வாங்கினார்.

கோளாறு வங்கி கடன் மூலம் 10 லட்சமும், எஞ்சிய பணத்தை தன் சேமிப்பில் இருந்தும் புரட்டி, காருக்கான 24 லட்சம் ரூபாயை செலுத்தினார். கனவுகளுடன் காரை வாங்கியவர், அதை ஆர்வமுடன் ஓட்டிப் பார்த்தார். ஆனால், அவரது மகிழ்ச்சி நீடிக்கவில்லை.

காரை வாங்கிய ஒரு சில மாதங்களுக்குள்ளாகவே அதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இது தொடர்பாக கார் டீலர்களிடம் கேட்டபோது, அவர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். இருந்தும், காரில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்னை நீங்கவில்லை.

ஒவ்வொரு முறையும், 'டேஷ் போர்டில்' உள்ள திரையில், இன்ஜின் மேலாண்மை சிஸ்டத்தில் குறைபாடு ஏற்பட்டிருப்பதாக காட்டியது. இது, காரை ஓட்டும் தனக்கும், அதில் பயணிக்கும் தன் குடும்பத்தினர் உயிருக்கும் பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக நினைத்த அவர், காரை விற்ற டீலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார் அளித்தார்.

ஆனால், அந்த புகாரை போலீசார் வாங்காததால், பரத்பூரில் உள்ள கூடுதல் முதன்மை நீதிமன்றத்தில் முறையிட்டார். இது தொடர்பாக, கீர்த்தி சிங் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:

காரை வாங்கும்போது எந்த பிரச்னையும் இருக்காது என கார் டீலர் வாக்குறுதி அளித்தார். அப்படியே பிரச்னை ஏற்பட்டாலும், அதற்கான பொறுப்பை ஏற்பதாகவும் உறுதியளித்தார். ஆனால், கார் வாங்கியவுடன், அதில் பெரிய அளவில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

அச்சுறுத்தல் இது பற்றி டீலரிடம் கேட்டபோது, உற்பத்தி குறைபாடு காரணமாகவே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக விளக்கம் அளித்தனர். மேலும் இதை சரி செய்ய முடியாது என்றும், ஒவ்வொரு முறையும் காரை நிறுத்திவிட்டு, 2,000 ஆர்.பி.எம்., வேகத்தில் ஆக்சிலேட்டரை அழுத்தி இயக்க வேண்டும் என தெரிவித்தனர்.

இந்த தொழில்நுட்ப கோளாறு, என் ஒட்டுமொத்த குடும்பத்தினர் உயிருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவது போல உள்ளது. எனவே, காரை தயாரித்த ஹுண்டாய் நிறுவனம், அதை வாங்கி விற்ற டீலர், மார்க்கெட்டிங் உயரதிகாரிகள், விளம்பர துாதர்களாக நடித்த நடிகர் ஷாருக் கான், நடிகை தீபிகா படுகோன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், உடனடியாக கீர்த்தி சிங் கொடுத்த புகாரை பதிவு செய்யும்படி மதுரா கேட் போலீஸ் ஸ்டேஷனுக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விசாரணை நடந்து வரும் நிலையில், வாகன கடனுக்கான தவணையையும் கீர்த்தி சிங் செலுத்தி வருகிறார். இதனால், மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

Advertisement