செப்டம்பர் மாதம் கொட்டப்போகுது கனமழை; வெள்ளம், நிலச்சரிவு ஏற்படும்; வானிலை மையம் கணிப்பு

11


புதுடில்லி: "செப்டம்பர் மாதம் இந்தியா மழைக்காலத்தை எதிர்கொள்ள உள்ளது. திடீர் வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்படும்" என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.


வடகிழக்கு மாநிலங்களில் ஆகஸ்ட் மாதம் துவக்கத்திலிருந்து கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக ஜம்மு காஷ்மீர் ஹிமாச்சலப் பிரதேசம் உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் மேகவெடிப்பு காரணமாக அதி கனமழை ஒரே நேரத்தில் கொட்டி தீர்த்தது. இதனால் அதிகமான உயிரிழப்புகளும், பொருட் சேதங்களும் ஏற்பட்டன. இந்த சூழலில் வரும் செப்டம்பர் மாதம் இந்தியா மழைக்காலத்தை எதிர்கொள்ளும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இது குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: செப்டம்பர் 2025க்கான மாதாந்திர சராசரி மழைப்பொழிவு, கடந்த காலங்களை விட அதிகமாக இருக்கும். சராசரி மழைப்பொழிவான 167.9 மில்லி மீட்டரை விட 109 சதவீதம் அதிக கன மழை பெய்யும். பெரும்பாலான இடங்களில் இயல்பான மழைப்பொழிவை விட அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.


இருப்பினும், வடகிழக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளில், இயல்பை விட குறைவான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகன மழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


இது தொடர்பாக, இந்திய வானிலை மைய இயக்குனர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா கூறியதாவது: செப்டம்பர் மாதத்தில் உத்தராகண்டில் கனமழை காரணமாக நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளம் ஏற்படும். தெற்கு ஹரியானா, டில்லி மற்றும் வடக்கு ராஜஸ்தானில் இயல்பு வாழ்க்கையை சீர்குலைக்கக்கூடும்.


பல ஆறுகள் உத்தரகண்டில் உற்பத்தியாகின்றன. எனவே, கனமழை பெய்தால் பல ஆறுகள் வெள்ளத்தில் மூழ்கும், மேலும் அது மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, இதை நாம் மனதில் கொள்ள வேண்டும். சத்தீஸ்கரில் உள்ள மகாநதி ஆற்றின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் பலத்த மழை பெய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement