நான்காவது சுற்றில் ஸ்வியாடெக்: யு.எஸ்., ஓபன் டென்னிசில் முன்னேற்றம்

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் 4வது சுற்றுக்கு போலந்தின் ஸ்வியாடெக், இத்தாலியின் சின்னர், அமெரிக்காவின் கோகோ காப் உள்ளிட்டோர் முன்னேறினர்.

அமெரிக்காவின் நியூயார்க்கில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், ரஷ்யாவின் அனா கலின்ஸ்கயா மோதினர். அபாரமாக ஆடிய ஸ்வியாடெக் 7-6, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

மற்றொரு 3வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், போலந்தின் மாக்டலினா பிரீச் மோதினர். இதில் கோகோ காப் 6-3, 6-1 என மிகச் சுலபமாக வெற்றி பெற்றார். ஜப்பானின் நவோமி ஒசாகா 6-0, 4-6, 6-3 என ஆஸ்திரேலியாவின் டாரியா கசட்கினாவை தோற்கடித்து, 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

சின்னர் வெற்றி: ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் 'நடப்பு சாம்பியன்' இத்தாலியின் ஜானிக் சின்னர், கனடாவின் டெனிஸ் ஷபோவலோவ் மோதினர். அபாரமாக ஆடிய உலகின் 'நம்பர்-1' சின்னர் 5-7, 6-4, 6-3, 63 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 4வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு 4வது சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், கனடாவின் பெலிக்ஸ் அகர்-அலியாசிம் மோதினர். மூன்று மணி நேரம், 48 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய ஸ்வெரேவ் 6-4, 6-7, 4-6, 4-6 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.


மற்றொரு 3வது சுற்றில் இத்தாலியின் லோரென்சோ முசெட்டி 6-3, 6-2, 2-0 என முன்னிலை வகித்திருந்த போது சகவீரர் பிளாவியோ கோபோலி காயத்தால் பாதியில் விலகினார். இதனையடுத்து முசெட்டி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு 4வது சுற்றுக்குள் நுழைந்தார்.

பாம்ப்ரி ஜோடி வெற்றி


ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி 6-0, 6-3 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்காவின் மார்கஸ் கிரான், லேர்னர் டியன் ஜோடியை வீழ்த்தியது.
* மற்றொரு போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, மொனாகோவின் ஆர்னியோடோ ஜோடி 4-6, 3-6 என அமெரிக்காவின் ராபர்ட் கேஷ், டிராசி ஜோடியிடம் தோல்வியடைந்தது. இந்தியாவின் அர்ஜுன் காதே, ஈகுவடாரின் ஹிடால்கோ ஜோடி 7-5, 6-7, 4-6 என எல் சால்வடாரின் மார்சிலோ அரேவலோ, குரோஷியாவின் மேட் பவிக் ஜோடியிடம் வீழ்ந்தது.

Advertisement