தெருநாய் வழக்கால் உலகம் முழுதும் பிரபலமானேன்: சுப்ரீம் கோர்ட் நீதிபதி பேச்சு

22

திருவனந்தபுரம்: '' தெருநாய் குறித்து விசாரித்த வழக்கு தான் என்னை, உலகம் முழுவதும் சிவில் அமைப்புகள் மத்தியில் பிரபலம் ஆக்கியது,'' என சுப்ரீம் கோர்ட் நீதிபதி விக்ரம் நாத் கூறியுள்ளார்.


தெருநாய்கள் கடிப்பதால் ரேபிஸ் பாதிப்பது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரித்த சுப்ரீம் கோர்ட் கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெருக்களில் திரியும் நாய்களை பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.


இதனையடுத்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் விக்ரம் நாத் சந்தீப் மேத்தா மற்றும் என்வி அஞ்சாரியா அமர்வு, முந்தைய தீர்ப்பில் மாற்றம் செய்தது. தெருநாய்களை பிடித்து தடுப்பூசி போட்டு , அந்த நாய்கள் பிடிக்கப்பட்ட இடத்திலேயே விட வேண்டும். ஆனால், ரேபிஸ் பாதித்த நாய்கள் மற்றும் ஆக்ரோசமாக திரியும் நாய்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என உத்தரவிட்டு இருந்தனர்.



இந்நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்த தேசிய சட்ட சேவை ஆணையத்தின் கூட்டத்தில் நீதிபதி விக்ரம் நாத் பேசியதாவது: நீண்ட காலமாக எனது வேலைக்காக சிறிய வட்டத்துக்குள்ளேயே அறியப்பட்டேன். இந்தியாவில் மட்டும் அல்லாமல், உலகம் முழுவதும் உள்ள சிவில் அமைப்புகள் மத்தியில் தெருநாய் விவகாரம் தான் எனக்கு அங்கீகாரத்தை அளித்தது. இதனால், தெருநாய்களுக்கு நான் நன்றி உள்ளவனாக இருப்பேன். இந்த வழக்கை எனக்கு ஒதுக்கிய தலைமை நீதிபதி கவாய்க்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாய் ஆர்வலர்கள் மட்டும் அல்லாமல், நாய்களும் என்னை வாழ்த்துவதாக எனக்கு செய்திகள் வருகின்றன.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement