கோவில் யானை தாக்கி பாகன் பலி
திருவனந்தபுரம்: கேரளாவின் கோட்டயம் மாவட்டம் தென்காமம் பகுதியைச் சேர்ந்தவர் முரளிதரன் நாயர் 53. பெருநாட்டைச் சேர்ந்தவர்கள் சுனில் குமார், பிரதீப். மூவரும் ஆலப்புழா ஹரிப்பாடு சுப்பிரமணியசாமி கோவிலில் உள்ள ஸ்கந்தன் யானையை பராமரித்து வந்தனர்.
நேற்று முன்தினம் காலை யானையை பண்ணைக்கு அழைத்து சென்றனர். சுனில் குமார் யானையின் மீது அமர்ந்திருந்தார். திடீரென்று ஆக்ரோஷம் அடைந்த யானை, பயங்கரமாக பிளிறிய படி உடலை உலுக்கி சுனில் குமாரை கீழே தள்ளி தந்தத்தால் குத்தியது.
படுகாயம் அடைந்த அவர் உடனடியாக திருவல்லாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பின் மற்ற பாகன்களான முரளிதரன் நாயர், பிரதீப் ஆகியோர் யானையை சாந்தப்படுத்தி அழைத்து சென்றனர். முரளிதரன் நாயர் யானை மீது அமர்ந்திருந்தார்.
சிறிது துாரம் சென்றதும் மீண்டும் ஆக்ரோஷம் அடைந்த யானை, முரளிதரனை தும்பிக்கையால் பிடித்து இழுத்து துாக்கி வீசியது. படு காயம் அடைந்த அவர் பெருமலை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார்.
இதைத்தொடர்ந்து, யானை சிகிச்சை சிறப்பு படை சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. பல மணிநேர முயற்சிக்குப் பின்னர் யானை சாந்தப்படுத்தப்பட்டது.