2 வாக்காளர் அட்டை வைத்திருப்பது குற்றம்: காங்., தலைவருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்

புதுடில்லி: இரண்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளது குறித்து விளக்கம் அளிக்கும்படி காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
பீஹாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதையொட்டி, கடந்த ஜூலை மாதம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு, மொத்தம் உள்ள 7.89 கோடி வாக்காளர்களில் 65 லட்சம் பேரின் பெயர்களை நீக்கியது. நிரந்தரமாக இடம் பெயர்ந்தோர், உயிரிழந்தோர் மற்றும் இரு வேறு இடங்களில் பெயர்களை பதிவு செய்தவர்கள் என நீக்கப்பட்டதற்கான காரணத்தை விளக்கியது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரவித்துள்ளன. மேலும் காங்கிரஸ் எம்பி ராகுல், எதிர்க்கட்சிகளின் ஓட்டுகள் திருடப்பட்டதாக குற்றம்சாட்டி வருகிறார்.
புகார்
இந்நிலையில் பாஜவின் அமித் மாளவியா வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ' காங்கிரஸ் தலைவர் பவன் கேரா இரண்டு தொகுதிகளில் வாக்காளராக பதிவு செய்து கொண்டுள்ளார். ஜங்புரா மற்றும் புதுடில்லி ஆகிய சட்டசபை தொகுதிகளில் அவர் பதிவு செய்துள்ளார். அவரது வாக்காளர் அடையாள அட்டை எண் XHC1992338 (ஜங்புரா) மற்றும் SJE0755967 (புதுடில்லி).
ஓட்டுத் திருட்டு என ராகுல் கூறுகிறார். அவருடன் இருக்கும் தொடர்பை தவற விடாத பவன் கேரா, இரண்டு வாக்காளர் அட்டை வைத்துள்ளார் . இது விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால் தேர்தல் கமிஷன் விசாரணை நடத்த வேண்டும் எனத் தெரிவித்து இருந்தார்.
விளக்கம்
இது தொடர்பாக பவன் கேரா கூறுகையில், இதற்கு தேர்தல் கமிஷன் தான் காரணம். 2016 ம் ஆண்டு புதுடில்லி தொகுதியில் இருந்து வெளியேறிவிட்டேன். வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்குவதற்கான விண்ணப்பம் கொடுத்துவிட்டேன். இன்னும் எனது பெயர் இருப்பது ஏன் என கேட்டு இருந்தார்.
நோட்டீஸ்
இந்நிலையில் இரண்டு வாக்காளர் அட்டை வைத்துள்ளது குறித்து விளக்கம் கேட்டு பவன் கேராவுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் வாக்காளராக பதிவு செய்வது தண்டனைக்குரிய குற்றம். இது குறித்து வரும் 8 ம் தேதி காலை 11 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டு இருந்தது.
தொடரும்
இது குறித்து பவன் கேரா கூறுகையில், தேர்தல் கமிஷன் எனக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதற்கு மற்றுமொரு ஆதாரம். ஓட்டு திருட்டு குறித்த எங்களின் புகார்கள் ஒதுக்கப்படும் நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷன் அவசரம் காட்டுகிறது.
கர்நாடகாவின் மாதவ்புரா தொகுதியில் ஒரு லட்சம் போலி ஓட்டுகள் குறித்த விவகாரத்தை ராகுல் அம்பலப்படுத்திய நிலையில், தேர்தல் கமிஷன் ஒரு ஓட்டு கூட அனுப்பாதது ஏன்? தேர்தல் கமிஷனின் தவறான நடவடிக்கைகளை தொடர்ந்து வெளிப்படுத்துவோம் . இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






