'கட்சியினருக்கு வணக்கம் மட்டும்தான்' தி.மு.க., நிர்வாகியின் குமுறலால் பரபரப்பு

1

அரூர் : 'அரூரில் தி.மு.க.,வினருக்கு, நகர செயலர் உள்ளிட்டோர், 'வணக்கம்' மட்டும் தான் வைக்கின்றனர்; வேறு ஒன்றும் செய்யவில்லை' என்ற கிளை செயலரின் குமுறல் பேச்சு, சமூக வலைதளங்களில் பரவுகிறது.


தர்மபுரி மாவட்டம், அரூர் டவுன் பஞ்., ஏழாவது வார்டு தி.மு.க., செயலர் முனுசாமி. அரூர் பஸ் ஸ்டாண்டில் உள்ள ஒரு டீக்கடையில் ‍அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.




அதை, மொபைல் போனில் வீடியோ எடுத்த ஒருவர், சமூக வலைதளங்களில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.


முனுசாமி பேசியிருப்பதாவது:



அரூர் தி.மு.க., நகர செயலர் முல்லை ரவி, டவுன் பஞ்., துணைத்தலைவர் தனபால் ஆகியோர் கட்சிக்காரனை சுத்தமாக மதிப்பதில்லை. வார்டுக்கு சென்று, மக்களிடம் குறை கேட்பதில்லை.


முல்லை ரவி, தன பாலுக்காக நாங்கள் சிறைக்கு சென்றோம். டவுன் பஞ்., துணைத்தலைவர் தேர்தலில் தனபால் வெற்றி பெற மூன்று நாட்கள் வெயில், குளிர், கொசுக்கடியில் படுத்திருந்தோம்.


அம்பேத்கர் நகர் ஏழாவது வார்டில் மட்டும், 2 கோடி ரூபாய்க்கு பணி நடந்துள்ளது. இதிலும், தி.மு.க.,வினருக்கு எதுவும் கிடைக்கவில்லை.


இதே, அ.தி.மு.க.,வாக இருந்தால் நகர செயலரோ அல்லது எம்.எல்.ஏ.,வோ, சம்பந்தப்பட்ட பகுதி ஆளுங்கட்சிப் பொறுப்பாளருக்கு செலவுக்கு பணம் கொடுத்திருப்பர்.




கோஷம் போடுவோர், கொடி நடுவோர், போஸ்டர் ஒட்டுவோருக்கு அ.தி.மு.க.,வில் செலவுக்கு பணம் கொடுக்கின்றனர்.



ஆனால், தி.மு.க.,வில் என்ன நடக்கிறது? கட்சியினரை எதிரில் பார்த்ததும், 'வணக்கம்' மட்டும்தான். அதை மீறி ஏதாவது கேட்டால், ஒரு மாதத்துக்கு போனே பேசுறதில்லை.



இதனால், ஒட்டுமொத்த, 18 வார்டு நிர்வாகிகளும், தி.மு.க., நகர செயலர் உள்ளிட்ட மேல்மட்ட தலைவர்கள் மீது அதிருப்தியில் உள்ளனர்.



கேட்டால், 'எங்களால் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியவில்லை; அதனால், யாருக்கும் எதுவும் செய்ய முடியவில்லை' எனக்கூறி தப்பிக்கின்றனர். ஆனால், வாரத்தில் மூன்று நாட்கள் சென்னைக்கு செல்கின்றனர். அதற்கு மட்டும் ஏது பணம்? இவ்வாறு அவரின் பேச்சு நீள்கிறது.


இதுகுறித்து முல்லை ரவி கூறுகையில், “யாருக்கும் எதுவும் கொடுக்காமல் இல்லை. முனுசாமி ஏன் இப்படியெல்லாம் பேசுகிறார் என புரியவில்லை. பின்னணியில் துாண்டுதல் உள்ளது,” என்றார்.

Advertisement