அரசிடம் இருந்து தகவல் கேட்பதே குற்றமா? வேலுார் இப்ராஹிம் கைதுக்கு பா.ஜ., கொதிப்பு

சென்னை: பா.ஜ., சிறுபான்மை பிரிவு தேசிய செயலர் வேலுார் இப்ராஹிம் கைதுக்கு, அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் டால்பின் ஸ்ரீதரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு, வேலுார் இப்ராஹிம் நேற்று முன்தினம் வந்தார். 'தமிழகத்தில் நடக்கும் கிட்னி திருட்டு குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதற்கு கிட்னி திருட்டு தொடர்பான தகவல்களை, டாக்டர்களிடம் கேட்க வேண்டும்' என கூறியுள்ளார்.
ஆனால், மருத்துவமனைக்குள் செல்ல, அங்கிருந்த காவல் துறையினர் அனுமதிக்கவில்லை. ஆனாலும், டாக்டரை சந்திக்க வேண்டும் என இப்ராஹிம் கூறியதால், அவரை கைது செய்து பூக்கடை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதைத் தொடர்ந்து, அவரை கடலுார் சிறையில் அடைத்தனர்.
வேலுார் இப்ராஹிம் கைதுக்கு, பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக, அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் டால்பின் ஸ்ரீதரன் கூறியதாவது:
தடை விதிப்பு அரசின் தவறுகளை மக்களிடம் அம்பலப்படுத்துவது, எதிர்க்கட்சிகளின் கடமை. வறுமையை பயன்படுத்தி ஆசை காட்டியும், ஏமாற்றியும் தமிழகத்தின் பல மருத்துவமனைகளில் கிட்னி திருட்டு நடப்பதாக செய்திகள் வருகின்றன.
தமிழக அரசே, தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுக்கு சொந்தமான மருத்துவமனை உள்ளிட்ட சில மருத்துவமனைகளில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய தடை விதித்துள்ளது.
இந்நிலையில், கிட்னி திருட்டு குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில், சென்னை அரசு பொது மருத்துவமனை டாக்டர்களிடம் தகவல்களை கேட்க, பா.ஜ., நிர்வாகி இப்ராஹிம் சென்றார்.
அவர் கேட்ட தகவல்களை கொடுத்திருக்கலாம். அதில் ஏதும் தயக்கம் இருந்தால், அதைச் சொல்லி தவிர்த்திருக்கலாம்.
ஆனால், தகவல் கேட்பதே குற்றம் என்பது போல, மருத்துவமனைக்குள் அனுமதிக்க
மறுத்ததோடு, அவரை கைது செய்து கடலுார் சிறையில் அடைத்துள்ளனர்.
கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபட்டவர்களை கூட, இவ்வளவு வேகமாக கைது செய்ய மாட்டார்கள்.
சர்வாதிகார ஆட்சியில் கூட இதுபோல நடக்காது. எனவே, வேலுார் இப்ராஹிமை உடனே விடுதலை செய்ய வேண்டும்.
லட்சணம்
வேலுார் இப்ராஹிம், பா.ஜ., தேசிய சிறுபான்மைப் பிரிவு செயலராக இருக்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக, அவரை எங்கேயும் செல்லவிடாமல் தி.மு.க., அரசு போலீஸ் வாயிலாக தொடர்ந்து தடுத்து வருகிறது.
கடந்த லோக்சபா தேர்தலின் போது பிரசாரத்துக்கே அவரை செல்ல விடாமல் போலீசார் தடுத்தனர். 'மீறி பிரசாரத்துக்கு செல்வேன்' என்று சொன்னதும், அவரை கைது செய்தனர்.
'சிறுபான்மையினர் நலன் காக்கும் அரசு' என்று, வாய்க்கு வாய் சொல்லும் தி.மு.க., அரசின் சிறுபான்மையின நலன் காக்கும் லட்சணம் இதுதான். இவ்வாறு அவர் கூறினார்.





மேலும்
-
நீர்வளத்துறை உருவாக்கியது ஏன்: முதல்வருக்கு நயினார் கேள்வி
-
நாட்டின் நீளமான கண்ணாடி பாலம்: ஆந்திராவில் செப்டம்பர் 25ல் திறப்பு
-
முதல்வர் கோப்பை போட்டியில் 290 மாற்றுத்திறன் வீரர் - வீராங்கனையர் பங்கேற்பு
-
மாநில பூப்பந்தாட்ட போட்டி நாய்க்கன்பேட்டை அணி தகுதி
-
80 வயது மூதாட்டியை குடும்பத்துடன் இணைத்து வைத்த காவல் கரங்கள்
-
விழுப்புரம் - திருப்பதி ரயில் 20 நாட்களுக்கு ஒரு பகுதி ரத்து